Sunday, September 17, 2017

கண்ணாடிக் கனவுகள்

"ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது, ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி..." சிறுவர் சிறுமியர் முழுஆண்டு விடுமுறையில் ஆலமரத்தடியில் அந்த எழுமலை கிராமத்தில் விளையாடிய காலம் அது. அன்று அவர்களுக்கு எட்டு முதல் பத்து வயதிருக்கும். அதே வயதைக்கொண்ட செல்லம்மாள் மட்டும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளவில்லை. அவள் அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறு அருகில் கிடந்த பாறைக்கல் ஒன்றின் மேல் அமர்ந்திருந்தாள். சங்கரி அவளை பார்த்து "ஏ செல்லம், நீ விளையாட வரலியா?" என்று கேட்டபோது செல்லம் சொன்னாள் "எனக்கு இந்த விளையாட்டு பிடிக்கும்தான், ஆனா நம்ம டாக்டர் விளையாட்டு விளையாடலாம் போல இருக்கு..." என்றாள். "ஏய், அது விளையாட ஊசி போடணும், காய்ச்சல் வச்சிப் பாக்கனும், ம்ம்ம்... அப்புறம்..." என்று சங்கரி இழுத்தபோது செல்லம் குறுக்கிட்டால். "பரவாயில்லை. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்". மற்ற சிறுவர் சிறுமியரும் "சார், கொஞ்ச நேரம் அப்பிடியும் விளையாடலாம்" என்றார்கள்.

செல்லம் வீட்டிற்குள் ஓடிச்சென்று, அவள் அண்ணன் சட்டை ஒன்றை அணிந்து வந்தால். தன் பள்ளிச் சீருடைக்குப் பொருத்தமான ரிப்பன் இரண்டையும் எடுத்து வந்து, சிறிய கல் ஒன்றை இடையே கட்டி இணைத்தாள். பின்பு அதனை "ஸ்டெத்" போல் கழுத்தில் மாட்டிக்கொண்டாள். தன தோழி சங்கரியை அழைத்து "நீதான் நர்ஸ்" என்றாள். "சிஸ்டர், முதலாவதாக வந்த நோயாளிய வரச் சொல்லு" என்று சொல்ல, தோழி சங்கரியும், ஒரு பையனை அனுப்பினாள். ஒரு தேர்ந்த மருத்துவர் போல் கண்ணால் உருவாக்கப்பட்ட ஸ்டெத்தை வைத்துப் பார்த்து, நாக்கை நீட்டச் சொல்லி, கண்களை விரித்துப் பார்த்து, "ஓ.கே. உனக்கு ஒரு ஊசி போட்டா சரியாயிரும்" என்று திண்ணை ஓரமாக அடித்து வைத்திருந்த தென்னைமாரு குச்சியை எடுத்து, எப்போதோ கண்டெடுத்த ஒரு சிறிய சென்ட் பாட்டில் மேல் வைத்து மருந்தெடுப்பது போல் பாவனை செய்து ஊசி போட்டாள். நின்றிருந்த சிறுவனோ "ஆ" என்று அலறுவது போல் நடிக்க, மற்ற சிறார்களும் "ஓ"வென்று கூவி சிரிக்க, மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் செல்லம்.

அப்போது அந்த வழியே வந்த பலம் விற்கும் தங்கம்மாள் பாட்டி, "அடியே செல்லம், நீ டாக்டராகி நம்ம ஊர் சனங்கள காப்பாத்தனும். இங்க நல்ல டாக்டர், ஆஸ்பத்திரி இல்லாம கஷ்டப்படுற நம்ம ஊரைக் கவனிச்சிக்க" என்றபடியே கடந்து சென்றாள். செல்லம்மாள் மனம் தனக்குள் ஏதோ ஒரு விதை துளைத்து வழியே வரத் துடிக்கும் ஒரு சிறு செடிபோல் உணரத் தொடங்கினாள். ஆம். அவள் ஆசையும் அதுதான். ஒன்பது வயதில் தனக்குள் ஒரு மருத்துவக் கரு உருவாவதை உணர்ந்தாள். அதை வளர்த்து, வெளிக்கொணர என்ன செய்ய வேண்டும்? எப்படி எல்லாம் முயற்சி செய்ய வேண்டும்? பக்கத்துத் தெருவில் வசிக்கும் குருமூர்த்தி சாரைக் கேட்க வேண்டும். ஆம். அவர் ஆசிரியராக வேலை பார்ப்பவர். போன ஆண்டு அவர் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தபோது தன அப்பாவிடம் வந்து இனிப்பு வழங்கிச் சென்றது அவளுக்கு நினைவிற்கு வந்தது.

ஆண்டுகள் நடைபோட செல்லம்மாளின் கனவுக்கு கண்ணாடி மாளிகை அவள் முயற்சியாலும், படிப்பினாலும், உயரத் தொடங்கியது. பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாகத் தேறினாள். மாவட்ட அளவில் மூன்றாவது இடம். பல நாட்கள் கூலி வேலை செய்யும் தாய் தந்தையரால் நல்ல உணவுகூடத் தர முடியாது. இருப்பதை உண்ணுவாள். வயல் காடுகளுக்கு மோட்டார் போட்டு நீர் பாய்ச்சும் மின்சாரம் தடைபடும். அப்போதும் மனம்  மெழுகுதிரி அல்லது சிம்னி விளக்கொளியில் படிப்பாள். குருமூர்த்தி ஐயாவிடம் சந்தேகம் இருந்தால் சென்று கேட்டுக்கொள்வாள். பதினோராம் வகுப்பு முடியும் பொது தாய்மாமன் வீட்டில் பெண் கேட்டு வந்தார்கள். "வசதியானவர் என் தம்பி, உன்னைத் தன் மக போல பாத்துக்குவான்" இது அம்மாவின் புலம்பல். ஒரு நிமிடம் மாமா மகன் முகம் நினைவில் வந்து போகும். மாரு நிமிடம் மருத்துவக் கண்ணாடி மளிகை அவளுக்குள் மிளிரும். "அம்மா நா படிக்கணும், டாக்டராகணும்". மாமா சொல்வார் "செல்லம், உன்ன நா படிக்க வைக்கிறேன். இப்போ பரிசம் மட்டும் போட்டுக்குவோம்."

"போங்க மாமா நா டாக்டராகிட்டு அப்புறம் பாக்கலாம்" இப்படிச்  அங்கிருந்து செல்லம் சென்று விடுவாள். நாட்கள் நகராத தொடங்கின. 12ஆம் வகுப்பு தெருவுத்தேதியும் வந்து சேர்ந்தது. தேர்வு எழுதி வெளியே வாரும் மாணவமாணவியர் பலபேர் கடினமாக இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால் பக்கத்து ஊரில் போய் தேர்வு எழுதிவரும் அலுப்பைத்தவிர செல்லத்துக்கு எதுவுமே கடினமாக இருக்கவில்லை.

"ஏம்மா செல்லம், நீட் தேர்வுக்கு நீ உன்னைத் தயார் பண்ணணுமே?" என்று குருமூர்த்தி சார் சொன்னபோது அதுபற்றி அவ்வளவாக அறிந்திராத செல்லம் கலக்கமுற்றாள். தேர்வு முடிவுகள் வெளியானபோது மாவட்ட அளவில் இரண்டாவது மாணவியாக 1181/1200 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தாள். இப்போது அவளுக்குள் இருந்த கண்ணாடி மாளிகை ஒளிபெற்று அவளை மருத்துவராகக் கண்முன் கொண்டுவர "நீட் தேர்வு" அவள் குறுகிப்போனால். மீண்டும் படித்தாள். ஓடி, ஓடி உயர்கல்வி படித்தவர்களிடமெல்லாம் உதவி கேட்டாள்.

பன்னிரண்டு ஆண்டுகள் கல்விக் கடலில் நீச்சல் அடித்து கரையேரப் போகையில் "நீட் புயல்" தன்னை மூழ்கடித்து விடுமோ? மனம் தளரக்கூடாது. நான் படித்து இதையும் வெல்வேன் என்றவள் முயற்சித்துப் படித்தால். ஆனால் நடந்தது என்ன? அரசியல்ப் பெரியவர்களும் தன்னைப் போன்ற கிராமப்புற பிள்ளைகளுக்காகப் போராடித் தோற்றது போல, அவளும் தோற்றுப் போனாள். அவளின் கண்ணாடிக்கு கனவு மாளிகை நொறுங்கி விழும் சப்தம் "ஆ அம்மா! நான் என்ன செய்வேன்? என்னால் இன்னொரு கனவுக்குள் சென்று நான் நொருங்கிப் போவதை விட, இதோ! இதோ!"

"செல்லம் இப்படி பண்ணிட்டியே?" இந்த அழுகுரல் தமிழ்நாடு முழுவதும் ஒழிக்க அவள் நிம்மதியாக உறங்கிப்போனால். உண்ணாமல், உறங்காமல் கனவு கண்டு, இன்று கனவுகள் காணமுடியாத பசியில்லாத உறக்கம் அவளைக் கண்ணாடிப் பெட்டிக்குள் கால்களை நீட்டி, நீட்டாக நீட் நினைவின்றி நிம்மதி காண வைத்தது.

-ப. வனஜா