Thursday, January 14, 2010

பொங்கல் திருநாளின் நோக்கமும் சிறப்பும் (நிலை மண்டில ஆசிரியப்பா)


பழையன போக்கிப் புதியன ஏற்கும்
விழைவினை நல்கி வெளிப்படை யாகப்
பொங்கியே பகிர்ந்து பூரித் துண்ணும்
தங்கமாம் குணத்தைத் தந்திடும் திருநாள்
திணைத்துணை நன்றியைப் பனைத்துணை யாக
நினைத்திடத் தூண்டி நெஞ்சினில் என்றும்
உழைப்பவர் உயர்ந்தவர் என்றிடும் எண்ணம்
தழைத்திட வைக்கும் தனிப்பெருந் திருநாள்
தமிழ்மறை தந்த வள்ளுவன் நினைவையும்
அமிழ்தென நல்கும் அரியநாள் இதுவே!