Tuesday, May 1, 2018

காவிரியும் காவேரியும்

“கல்லும் மலையும் குதித்து வந்தேன்
பெரும் காடும் செடியும் கடந்துவந்தேன்”

    இப்படிப் பாடியபடியே ஆற்றங்கரை படித்துறையின் படிகளில் குதித்து இறங்கினாள் காவேரி. ஏழு வயது நிரம்பிய காவேரிக்கு இரு அண்ணன்கள் உண்டு. ஆனால் தங்கையோ அக்காவோ கிடையாது. ஆர்வமாகப்படி இறங்கியவளை அம்மாச்சி “ஏய் பார்த்து இறங்குபுள்ள வழுக்கிறப்போகுது” என்று செல்லமாகக் கண்டித்தாள். “அம்மாச்சி இந்த காவிரி நதியைப் பார்த்து தான எனக்கு அம்மாவும் அப்பாவும் பேரு வெச்சாங்க”? என்று காவேரி கேட்டபோது அம்மாச்சி லேசாக முறுவலித்தாள்.
   
    “ஆமாண்டி செல்லம் உன் அப்பாவுக்கு பொட்டபுள்ள வேணும்ணு ரொம்ப ஆசை. உன் அண்ணங்க பொறந்தபின்னால அந்த ஆசையில இந்த காவிரி ஆத்துக்கு வந்துட்டு குளிச்சிட்டு போறப்ப “காவிரித்தாயே எனக்குப் பொண்ணு பொறக்கனும் அப்படிப் பொறந்துட்டா உன் பேரை வைக்கிறேன்னு இந்த நதிகிட்ட சொல்லிட்டு வருவாராம். அதான் உனக்கு அந்த பேரை காவேரின்னு வெச்சாரு” பாட்டி இதைச் சொன்னபோது காவேரியின் கண்கள் அகல விரிந்தன. “ஆத்துக்கு நாம பேசுறது புரியுமா அம்மாச்சி?” என கேட்டாள். ம்ம்….. புரியுமோ புரியாதோ நாம நினைக்கறத அந்த ஓடுற தண்ணி கடல்ல போய் சொல்லுமாம். அங்க இருக்கிற கடல்மாதா அலை மூலமா மேல இருக்கிற சாமிகிட்ட சொல்லுமாம். இப்படி ஒரு நம்பிக்கையிலதான் ஓடுற தண்ணியோட பேசுவாங்களாம்” அம்மாச்சி இப்படிச்சொன்னபோது காவேரி தன் கால்களைத் தொட்டு ஓடும் காவிரி ஆற்றைப்பார்த்து தனக்கு ஒரு நல்ல தோழி கிடைத்து விட்டதாக உணர்ந்தாள். “சரி சரி இனி தினமும் உன்கிட்ட என்னைப்பத்தி சொல்வேன். நீயும் என்கிட்ட அன்பாக இருக்கனும்” என்று தன்மேனியைத் தொட்ட காவிரியிடம் காவேரி சொல்லிப் பூரித்தாள்.
    தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர அழகான கிராமம்தான் காவேரி பிறந்த ஊர். செல்லப்பெண்ணாக தந்தையாலும் அண்ணன்கள் அம்மா அம்மாச்சி தாத்தா என்று எல்லோரின் அன்பாலும் வளைய வந்தாள். இருந்தாலும் வளைந்து நெளிந்து ஓடும் காவிரிதான் காவேரியின் இணையில்லாத் தோழியாக தன்னுள் அவள் வரித்துக்கொண்டாள்.
   
    “ஆற்றுத்தோழியே! நீ கோடையில் மெலிந்து பின் கொட்டும் மழையில் பெருத்து”…….. பத்து வயதுக் காவேரி காவிரியின் நீரை கைகளில் அள்ளி தன் வகுப்புத் தோழிபோல் எண்ணி தான் உண்டது முதல் விளையாடியது அன்னை தந்தை மடியிலாடி மகிழ்ந்தது வரை மெல்லிய குரலில் சொல்லி மகிழ்வாள்.
    காவிரி ஆறுபேசவில்லை. ஆனால் என்றாவது சில நாட்களில் காவேரி வரவில்லையென்றால் காவிரிக்கு துக்கமாக இருக்கும்.
   
    “ஏனடி வரவில்லை அழகுப் பதுமையே! உன்னைக் காணாமல் கரை ஏங்குதடி” காவிரி ஆற்றுத்தண்ணீர் இப்படிச் சொல்லி சலசலத்து ஓடுவது யாருக்கும் புரியாதுதான். ஆனால் அங்கு ஓர் தெய்வீக அன்பு மலர்ந்து மணம் வீசியது காவிரிக்கும் காவேரிக்கும் மட்டுமே புரியும். காவேரி பன்னிரண்டு வயதைத் தொட்டபோது அவள் மேனியில் ஆற்றங்கரை பூஞ்சோலையாக அழகும் வண்ணமும் மின்னின. காவிரி தன் நீரால் அவளை மேலும் பொலிவுபெறச்செய்தது. இப்போதெல்லாம் அம்மாச்சியோடு அம்மாவும் ஆற்றங்கரைக்கு வர ஆரம்பித்தாள். மகளின் எழிற்கோலம் பாதுகாக்கப்படவேண்டும் என அவள் ஆடைமாற்றும்போது நீராடும் போதும் காவலாக நிற்பாள். ஒரு புதுப்புனல் வரும் காலம் காவேரியின் உடலும் புதுப்புனல் கண்டது. அன்று முதல் காவிரிக்கு வரும் காவேரியை மிக விரைவில் நீராடி விட்டு வரச்சொல்லி படித்துறையின் படியில் அம்மா அமர்ந்து சொல்லும்போது காவிரியுடன் காவேரி அதிகம் பேச முடிவதில்லை. இப்படியும் அப்படியுமாக பள்ளிப்பருவம் கடந்தது. ஒரு விடுமுறை நாளில் காவேரி தன் தோழி காவிரியிடம் இப்படிச் சொன்னாள்.
       
    அண்ணனின் தோழனாம் அன்பரசன்….
    அவன் கண்களால் பாடம் சொன்னான்…..
    பல பாடங்கள் பள்ளியில் படித்த நான்
    அவன் சொன்ன பாடத்தால் பறி கொடுத்தேன் மனதை….
   
    காவிரி சிரித்தது. மகிழ்ந்தது. “காவேரிப்பெண்ணே! உன் கனவுகள் கனிய நான் கடல் மாதாவிடம் சொல்வேன்” என்று அவள் காதோரம் சலசலத்தது.
   
    “தமிழ் நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட இந்த கர்நாடக அரசு ஏன் இப்படி மறுக்கிறது? எத்தனை அணைகளைக் கட்டி இப்படி வர்ற தண்ணீரின் அளவைக் குறைத்தால் நாம என்ன செய்யுறது?
    அப்பாவின் நண்பர்கள் திண்ணையில் அமர்ந்து பேசியதைக் காவேரி கேட்டாள். அவள் கண்களில் வெந்நீர் புறப்பட்டது. மறுநாள் ஆற்றுக்குச் சென்ற அவள் காவிரியிடம் கண்கலங்கிப் பேசினாள்.

        அன்புத்தோழிக்கு அணைபோட்டு
        அடைத்தாரோ? உன்
        அழகுநடை பூமியில் புரளப்
        பூட்டும் போட்டாரோ?
        குடகில் பிறந்த உன்னைக்
        குடத்துத் தண்ணீராய்
        குறுக்கியும் வைத்தாரோ? குமரியே!
        உன் கூக்குரலைக் கேளாத
        செவிடரை என்னவென்பேன்?
        தோழியே! தோள்தட்டிச் சொல்லடி
        உன் சுமையை….

காவேரியின் இந்த விசும்பல் கேட்ட காவிரியும் பேசியது.
   
    “அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டேன் ஒருகாலம். புpன் காக்கையாக கணபதி வந்து கவிழ்த்து விட்டதில் பெருகி ஓடி வந்தேன் எனப் புராணங்கள் எழுதி வைத்தார்கள். இன்று கமண்டலம் என்றால் காக்கை கொட்டிவிடும் என்று அணைகளைக்கட்டி அடைத்துவைத்தாரடி” என்னை யாருக்குச் சொந்தமென நீதிமன்றம் கூற முடியவில்லை. நான் இயற்கை அன்னையின் பிள்ளைதான் என்றாலும் கடல் கணவனைச் சென்று கலந்திட எனக்கு ஏன் இத்தனை தடைகள் வழியெங்கும் தடுப்புகள் போட்டுவைக்க இவர்கள் யார்?” காவிரி புலம்பியது காவேரியின் கண்கள் இன்னுமொரு காவிரியானது.
    நாட்கள் பல சென்றன. காவிரியிடம் ஒருநாள் காவேரி பேசினாள்.
   
    “அன்பரசன் என் அரசனாக அன்னை தந்தை விரும்பவில்லை. அதனால் நானும் அவரும் ஒரு முடிவு செய்துள்ளோம். நாளை பொழுதுவிடியும்போது நான் அவருடன் யாரும் காணாமல் நெல்லைக்குப் போகிறேன். உன்னிடம் மட்டுமே இதனைச் சொல்கிறேன். அவரை நம்பி பயணப்படப்போகும் நான் உன்னைப்பிரிவதனால் மட்டுமே மனம் துடித்துப்போகிறேன். தோழியே! நாளை மறுநாள் முதல் நான் தாமிரபரணிக்கு அண்ணியாவேன். ஆம!; என் கணவரின் சகோதரி என் நாத்திதானே? என்னை வாழ்த்தியனுப்பு காவிரிக்கண்ணே!” என்று காவேரி தன் கண்ணீரை காவிரியில் கலந்தாள். காவிரி வாழ்த்தியது. :நீ நன்றாக வாழ்ந்திட என்றும் நான் கடல் காதலனிடம் வேண்டிக்கொள்வேன்” என்று கூறிய காவிரி சொன்னது சோகமாக…….
   
    “பெண்ணே மனிதக் கட்டுகளையும் கட்டுப்பாடுகளையும் உடைத்துவிட்டு நீ உன் காதலனோடு போகிறாய். ஆனால் மனிதன் கட்டிய அணைக்கட்டுகளைத் தாண்டி நான் பாய்ந்தோட முடியாமல் கழிவுகளையும் நாற்றங்களையும் சில இடங்களில் என் மேனியில் சுமந்து கொண்டும் சீர்கெட்டும் அழிந்து வருகிறேன். எனக்காக நீ உன்சாமியிடம் வேண்டிக்கொள்வாயா? பெண்ணே…..என் காவேரியே….
    காவிரியின் புலம்பல் காவேரிக்குப் புரிந்தது என்றாலும் காவிரி பல நூறு ஆண்டுகள் வாழ்வாள். ஆனால் காவேரி ஒரு நூறு வாழ்வதே கடினம். எனவே அழுத விழிகளோடு அனபரசனோடு அடுத்தநாள் விடிகாலை அவள் காதல் பயணம் மேற்கொண்டாள். காவேரியையாவது வாழ விடுவார்களா?......

எப்படிச் சொன்னாலும்

    பழனிச்சாமி சோர்வாக வாசலில் வந்து அமர்ந்தார். ஐம்பத்து ஏழு வயதாகும் தான் அடுத்த வருடம் ஓய்வு பெற்றுவிடுவோம் இன்னும் மகன் சரவணனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவ்வப்போது தற்காலிகமாக ஓரிரு மாதங்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வருவான். அவ்வேலைகளில் நிரந்தரமாகக் கிடைக்கும் சூழ்நிலை இருந்தாலும் பணம் செலவழித்து யாராவது அமர்ந்துவிடுவார்கள். சரி என்ன படிப்புதான் அவன் படித்தான்?

    குழந்தை முதல் பள்ளியிலும் சரிஇ கோவில்இ ரோட்டரி சங்கங்கள் என்று எங்கு வேண்டுமானாலும் பாட்டுகள் மனப்பாடம் செய்து ஒப்புவித்து பரிசுகள் பல வாங்கியவன்தான் சரவணன்.

    திருவாசகம் திருப்புகழ் தேவாரம்……என்று போட்டிகளில் பாடிப் பரிசுபெற்ற அவன் தானும் அர்ச்சகராக வேண்டுமென எண்ணியது அவன் தந்தைக்கு வியப்பளித்தது. ‘அர்ச்சகரா? நீயா? அது…..நம்ம ஆளுக எல்லாம் ஆக முடியாது. அது அந்த….ஆளுக மட்டுந்தான் ஆக முடியும்’! இது பதினாங்கு ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

    சரவணன் வளர வளர அவன் எண்ணமும் ஆலமரமாக மனதில் வேர் விழுது என ஊன்றி அழுத்தமானது. அப்போது ஒரு சிறு ஒளி ஏற்பட்டது. அல்லும; பகலும் இறைவனின் பாடல்கள் மட்டுமல்லாது புராணங்கள் படித்து தன்னை இதற்காகவே உருவாக்கிக் கொள்ள அவன் நினைத்து 12ம் வகுப்பு முடித்தபோது அன்றைய அரசாங்கம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்ததோடு மட்டுமின்றி அந்தப்படிப்பிலும் (அர்ச்சகராகப் படிப்பது) மற்ற சாதியினரையும் சேர்த்துக்கொள்ள கட்டாயச் சட்டத்தினைப் பிறப்பித்தது.

     பழனிச்சாமிக்கு மகனின் ஆசையை நிறைவேற்ற ஒரு வழி பிறந்தது. சரவணனோ தான் வணங்கிய தெய்வங்கள் எல்லாம் தன்னை மலர்த்தூவி வரவேற்பது போல் உணர்ந்தான். பழனிச்சாமிக்கும் தான் மின்சாரவாரியத்தில் வேலை பார்த்து வந்ததால் யாரைப் பிடித்து இடம் வாங்க முடியும் என்று பாதை தெரிந்தது. நடந்தது முடிந்து. சரவணன் படித்தான் நல்லமுறையில் தேர்ச்சியும் பெற்று சான்றிதழும் வாங்கினான். ஆனால் அதன்பின் இன்றுடன் அவன் படித்து முடித்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. பழனிச்சாமி வாசலில் அமர்ந்தவாறே ‘சரவணன் எங்கே?’ என்று தன் மனைவி ரேவதியிடம் கேட்டார்.

    ‘ஆங்…சொல்ல மறந்து விட்டேங்க’. இன்னைக்கு தம்பி ஒரு விஷயம் சொன்னான். சட்டம் போட்டாச்சாம். எந்த சாதிக்காரங்களும் அர்ச்சகராகலாம்னு’ அதப்பார்த்ததும் பக்கத்துலே ‘அந்த ஐயர்கிட்ட கேட்கப் போயிருக்கான். பழனிச்சாமிக்கு உற்சாகம் பிறந்தது’. “என்ன…..நிசமாவா?! அவரும் கிளம்பி சரவணன் போன அந்த அவர் வீட்டிற்குப் போனார். பின் சில மாதங்களில் சரவணனுக்கு வேலை கிடைத்தது.

    நாட்கள் மாதங்கள் வருடங்கள் ஒன்றிரண்டு கடந்தன.

    சரவணன் கோவில் கோவிலாக அனுப்பப்பட்டான். இவன் பிறந்து வளர்ந்த தெருவில் உள்ளோர்களும் சரி கோவிலுக்கு வரும் வேறுசிலரும் சரி சரவணனைக் கண்டால் திருநீறுகூட வாங்குவதில்லை அங்கிருக்கும் அந்த அவரிடம் மட்டும் “சாமி திருநீரு குங்குமம் கொடுங்க” என்று கேட்டபோது திகைத்துப் போனான். இவர் காதுபட சிலர் இப்படியும் பேசினார்கள்.

    “சர்க்கஸில் கோமாளியும் உண்டு….சிங்கம் புலி கூட வருகிற வீரர்களும் உண்டு” இவனைப் பார்த்தால் நம்மால அந்த இடத்திலே வச்சுப் பார்க்க முடியலே” சரவணனுக்கு மனம் நொந்து போனது.

    “அடப்பாவிகளா நான் கோமாளி என்றால் நீங்கள் எல்லாம் யார்? இறைவன் முன்னால் எல்லாரும் சமம் என்பதுதானே நியதி. சர்க்கஸ் கூடாரம் வேடிக்கை காட்டவும் காசு சம்பாதிக்கவும்தானே? கோவில் என்பது அப்படியா? நான் அவர்களைவிட எந்த விதத்தில் குறைந்தவன்? நல்ல காரியங்கள் கல்யாணம் இன்னபிற சடங்குகளும் நடத்த எனக்குத் தகுதியில்லை என்று நீங்கள் முடிவு செய்தால் நீங்கள் வணங்கும் தெய்வங்கள் எனக்குத் தகுதியில்லாதவை. உங்களுக்காக மந்திரம் சொல்லி இடைத்தரகனாக இறைவனுக்கும் உங்களுக்கும் இடையே இருப்பதைவிட என் அறிவையும் உடல் உறுதியையும் கொண்டு நான் கௌரவமாக வாழ்ந்து கொள்வேன். காசுக்காகவும் பிற சலுகைகளுக்காகவும் உங்களையே கேவலமாக எண்ணும் அவர்களைவிட நான் உயர்ந்து காட்டுவேன் என்று எண்ணியவாறு வெளியே வந்த சரவணன் தமிழ்நாடு நடத்திய சர்வீஸ்கமிஷன் பரீட்சைகள் எழுதி கிராம நிர்வாக அதிகாரியாக சில வருடங்களில் வேலையில் அமர்ந்தான்.

    “சாமி” இறப்பு சான்றிதழ் வேணுங்க” சாதிச் சான்றிதழ் போட்டுத் தரணும் ஐயா! வாரிசு சான்றிதழ் தேவைப்படுதுங்க சாமி” என்று கேட்டுவரும் இந்த அடியவர்களுக்காக பணம் ஏதுமின்றி பணி செய்யும் சரவணனின் சாதி இன்று பலருக்கும் மறந்து போனது.

    மந்திரங்களை “எப்படிச் சொன்னாலும்” மனங்கள் மாறாத வரையில் நாம் அடிமைகள் என்பதை நாம் அறிவுடன் உணர்வது எப்போது?
    ஒருநாள் தன் அலுவலகத்திற்கு தன்னுடன் பள்ளியில் பயின்ற ரஹிம் வந்திருந்தான் ஒரு சான்றிதழ் பெற சரவணன் மகிழ்ந்து வரவேற்றான். அவன் இப்போது இமாம் ஆகியிருப்பதாகச் சொன்னபோது சரவணன் மகிழ்ந்தான். அதே வேளையில் தான் கோவில் குருக்களாகி அவமானப்பட்டதெல்லாம் நினைவுக்கு வர ஜாதி என்ற போர்வையின்றி ரஹிம் இமாம் ஆனது இன்று மதிக்கப்படுவது….சரவணன் சிந்தித்தான். சட்டங்கள் வரலாம். ஆனால் சமுதாய மாற்றம் வராதபோது..?! பாதை மாறுவது நல்லதா? அல்லது நாத்திகனாகி சாதி சாக்கடையை ஒழிப்பதா? சிந்தித்தான் சரவணன். அவன் விடை காண்பான் விரைவில்…….