இயேசுவின் அருள்வேட்டல்
1. ஆங்கில மொழியில் அலெக்ஸாண்டர்
போப்பவர் எழுதிய காப்பியத்தைத்
தீங்கறு வகையில் மொழிபெயர்க்கும்
திறனெனக் கருள்செய் எனவேண்டிப்
பாங்குடை உன்திருப் பாதமலர்
பணிந்தேன் ஏசு பெருமானே
தீங்கிழைத் தோர்க்கும் அருள் செய்த
தேவா நீயும் அருள்வாயே
அவையடக்கம்
2. ஆங்கிலப் புலமை இல்லா
அடியவன் செய்யும் இந்நூல்
தேங்கிய குட்டை நீர்போல்
தெளிவற்று இருந்த போதும்
ஓங்கிய போப்பின் நூலுக்
கொப்பிலை என்ற போதும்
பாங்குடன் பொறுத்த ருள்க
பணிவுடன் வேண்டு கின்றேன்
பகுதி
1 -பெலிண்டா துயிலல்
3. வெண்ணிறத் தந்தம் கொண்டு
இழைத்ததோர் கட்டில் தன்னில்
வண்ணப்பூந் துகில்கள் தம்மை
வனப்புற விரித்தே நாறும்
தண்ணிய மலர்கள் தூவித்
தலையணை மெத்தை யிட்டுக்
கண்ணிணை மலர்கள் மூடித்
துயில்கிறாள் கவினார் செல்வி
4. பொன்னிற மலரால் ஆன
பொலிவுகொள் சரங்கள் அந்தச்
செந்நிற மேனி யாளின்
செழுங்கருங் கூந்தல் தன்னில்
மின்னிடும் தோற்றம் அந்த
மிளிர்நீல வானம் தன்னில்
மின்னிடும் மீன்கள் ஒக்கும்
மெல்லிடை மின்னல் ஒக்கும்
கதிரவன் ஒளிவர
பெலிண்டா கண்மலர்தல்
5. வெண்ணிறத் திரைகள் ஆடும்
காலதர் வழியே தன்னின்
பொன்னிறக் கதிர்கள் நீட்டிப்
பொலிவுடன் துயிலும் மங்கை
தன்னுடல் தொட்டான் வெய்யோன்
தளிருடல் தாளா தன்றோ
பொன்னுடல் சிலிர்த்தாள் அன்னம்
புதுமலர் விழிகள் பூத்தாள்
பெலிண்டா மீண்டும் துயிலல்
6. மங்கையின் விழிப்பூ புத்து
மாசறு ஒளியே சிந்த
பங்கய மலரின் கேள்வன்
பளபள ஒளியும் மங்க
திங்கள்நேர் நுதலாள் 'பாவம்'
செங்கதிர் நம்மால் தன்னின்
பொங்கொளி மங்கல் வேண்டா
எனமனம் நினைத்தாள் போலும்
7. தலையினைச் சேர்த்தாள் மீண்டும்
தலையணை தனிலே தன்னின்
கலையெழில் கொஞ்சும் மேனி
கடுங்கதிர் தாக்கா வண்ணம்
கலைந்தவண் கிடந்த போர்வை
கையினில் எடுத்தாள் போர்த்தாள்
மலர்ந்ததன் இமைகள் மூடி
மறுபடி தூக்கம் கொண்டாள்
பெலிண்டாவின் கனவில் ஏரியல் தோன்றி உரைத்தல்
8. அணங்கவள் மீண்டும் தூங்க
அன்னநேர் நடையாள் தன்னின்
மணங்கமழ் மலர்போல் கண்ணுள்
மன்மதன் போலத் தோன்றி
வணங்கிடும் வான், தீ மண், நீர்
தேவதை தம்மின் ஒப்பில்
கணங்களின் தலைவன் ஆன
ஏரியல் இதனைச் சொன்னான்
9. மண்ணுறை மாதர் தம்மில்
மருவறு அழகில் மிக்கோய்
விண்ணுறை எங்கள் கூட்டம்
விழைவுடன் உன்னைத் தம்மின்
கண்ணினைப் போலக் காக்கும்
கடனது உடைத்தாம்;; உன்போல்
பெண்களும் மழலை மட்டும்
நான்சொலல் கேட்டல் கூடும்
10. கொடியதாம் மொழிகள் பேசும்
கோதையர் இறப்பின் பின்னர்
கொடியதாம் நெருப்பைச் சார்வார்;
தேவதை வடிவம் கொள்வார்.
நொடியினில் சலனம் எய்தும்
நுண்ணிடைப் பெண்கள் மாண்டால்
கடிபுனல் சார்வார்; ஆவார்
தேவதை பெண்ணே இன்னும்...
11. கற்பினில் பிழைதான் செய்த
காரிகை மரணம் எய்தின்
அற்பமாம் மண்ணைச் சார்வாள்;
தேவதை ஆவாள் என்றும்
பொற்பிலா ஆடம் பரமே
நாடிடும் பெண்கள் செத்தால்
வெற்பதும் தீண்டல் செய்யாத்
தேவதை ஆவார் விண்ணில்
12.
இந்தநால் வகையாய் நான்சொல்
தேவதை மாந்தர் கண்ணில்
இந்துநேர் நுதலாய் தோன்றார்;
இவர்தமில் விண்தே வகைகள்
தந்தமின் எண்ணம் போல
ஆண்பெணின் உருவம் கொள்ளும்
விந்தைகொள் வடிவம் கோடி
விளங்கிட எடுக்கும் அம்மா
13. பெண்களில் அழகும் கற்பும்
பெரிதுமே கொண்டோர் தம்மைக்
கண்ணிமை விழியைக் காத்தல்
போலவே நாங்கள் காப்போம்
கண்களில் காதல் போதை
ததும்பிடப் பார்ப்போர் தம்மால்
விண்புகழ் பெண்கள் கற்பு
விலகிடா வண்ணம் காப்போம்
ஏரியலின் எச்சரிக்கை
14. எழில்மிகு சிலையே என்பேர்
ஏரியல் என்ப தாகும்
கழிபெரும் அன்பால் உன்பால்
கழறுமென் மொழிகள் கேட்பாய்
மொழியரும் துன்பம் உன்னை
மேவிடும் என்றே கண்டேன்
மொழியவே அறியேன் அஃது
எவ்வகை என்றே அம்மா
15. எவ்வகைத் துன்பம் என்றும்
எங்கது நிகழும் என்றும்
கொவ்வைநேர் இதழாய் தேறேன்
அதுநிகழ் காலம் தானும்
வெளவிநேர் விழியாய் காணும்
எதிலுமே விழிப்போ டிருநீ
கவ்விடும் பார்கை கொண்ட
காளையர் காணும் போது.....
16. விழிப்புடன் இருத்தல் செய்வாய்
இல்லையேல் துன்பம் நேர்ந்து
விழிப்புனல் சிந்த நேரும்
விளங்கெழில் மாதே சொன்னேன்
பழிப்புயல் சூழா வண்ணம்
காத்திடப் பாவை உந்தன்
விழிக்குளே புகுந்தே சொன்னேன்
விடைபெறு கின்றேன் அம்மா
பெலிண்டாவின் நாய் அவளது துயில் நீக்கல்
17. மேற்படி மொழிகள் சொல்லி
மேன்மைசால் அவனும் போனான்
பாற்கடல் துயிலும் தேவன்
பாவையை நிகர்த்தாள் தன்னின்
ஏற்புடை நாயாம் ஸாக்கும்
ஏந்திழை பாதம் நக்கி
மாற்றுதல் செய்யும் அந்த
மங்கையின் தூக்கம் தன்னை