Sunday, February 2, 2014

இயற்கை (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


களைத்துவரும் மனிதர்க்கு நிழலைத் தந்து
      களிப்படையச் செய்வதுநல் இயற்கை ஆகும்
முளைத்திடுநல் செடிகொடிநல் இயற்கை ஆகும்
      முயல்மான்கள் முதலான விலங்குக் கூட்டம்
திளைத்திடுநல் லின்பத்தில் உள்ளம் சொக்கத்
       தீங்குரலில் பாடுகிற பறவைக் கூட்டம்
சளைத்தலின்றி அழகுமிகு காட்சி தம்மைச்
      சமைக்கின்ற இயற்கைக்கு நிகரே யில்லை

Thursday, January 2, 2014

நல்லாசிரியர் (நேரிசை ஆசிரியப்பா)


ஒழுக்கம் இரக்கம் இறைமை கொள்கை
விழுப்பம் மிக்க கலைகளில் தேர்ச்சி
தொகுத்துக் கூறும் வன்மை மேன்மை
பகுத்துக் காணும் உலகியல் அறிவு
சான்றோர் போற்றும் சால்பாம் குணங்கள்
வான்றோய் மலைபோல் வளமோ டுயர்வு
நிலமதை யொத்த திண்மை பொறுமை
நலமிகு நிறைகோல் போன்ற நடுநிலை
மணத்தோடு மலரும் மலர்போல் மாட்சி
குணத்குயர் வோரே நல்லா சிரியர்
நன்னூல் நவிலுமிந் நலமோடு
பன்னெடுங் காலம் பார்மிசை வாழ்கவே!

Monday, December 2, 2013

சீரழிக்கும் தொலைக்காட்சி (கலிவிருத்தங்கள்)


1. நெறியற்ற நிறுவனங்கள் பேசும் பொய்கள்
    அறிவுக்கு வேலைதராப் பரிசுத் திட்டம்
    வெறியூட்டிப் பண்பாட்டைக் கெடுக்கும் பாட்டு
    தறிகெட்ட வாழ்வுக்கா தொலைவின் காட்சி?

2. கட்டிய உடையினைக் களையும் காட்சியால்
    ஒட்டிய உதடுகள் உரசும் காட்சியால்
    கட்டினில் புரண்டிடும் காமக் காட்சியால்
    கெட்டிடும் இளமனம் போதும் கீழ்மையே

3. பிறமொழிச் சொற்களைப் பிணைத்த ஓசையை
    நறவது நிகர்தமிழ் பாடல் என்பது
    நெறியது நெறிசெலத் தூண்டும் கள்ளினை
    அறிவிலி உயிர்தரு அமுதம் என்பதாம்

Saturday, November 2, 2013

நலம்சேர்க்கும்வழி (இருவிகற்ப நேரிசை வெண்பா)


தாய்பபாலுக் கொப்பான தாய்மொழியில் கற்பதுதான்
சேய்போலும் மாணவர்க்குச் சீரியது – நோய்போலத்
தாக்கிநலம் போக்குகிற ஆங்கிலத்துக் கல்விதனை
நீக்கிநலம் சேர்க்கும்வழி தேர்

Wednesday, October 2, 2013

வன்முறையை நீக்கலாம் வா (இருவிகற்ப நேரிசை வெண்பா)


அன்புவழி நின்றே அமைதியினைக் காத்திடுதல்
இன்பவழி என்றுணர்ந்து இவ்வுலகில் - துன்பமுறும்
நன்முறையை நாடுதலே நன்றாகும்@ நன்னெஞ்சே
வன்முறையை நீக்கலாம் வா

Monday, September 2, 2013

முரசே தொடர்ந்து முழங்கு (இருவிகற்ப நேரிசை வெண்பா)


தமிழ்நாட்டி லில்லை தமிழ்க்கல்வி யென்றா
லுமிழாதோ நம்மை யுலகம்? – தமிழ்நாட்
டரசே தமிழ்க்கல்விக் காக்கம்செய் யென்று
முரசே தொடர்ந்து முழங்கு

Friday, August 2, 2013

உயிரைக் கொடுப்போம் உவந்து (இருவிகற்ப நேரிசை வெண்பா)


தன்குஞ்சைக் காப்பாற்றத் தாய்க்கோழி வல்லூற்றைத்
தன்னுயிருக் கஞ்சாது தாக்குங்காண் - அன்பே!
செயிரில் மொழியாம் செந்தமிழைக் காக்க
உயிரைக் கொடுப்போம் உவந்து