Showing posts with label எழுத்துக்கள். Show all posts
Showing posts with label எழுத்துக்கள். Show all posts

Sunday, July 3, 2016

மழையே வாழ்க! (இருவிகற்ப நேரிசை வெண்பா)


வாடும் பயிர்காக்க வாராதோ காவிரியில்
ஓடும்நீர் என்றதுயர் ஓட்டிடவே – நீடுபுகழ்
கார்முகிலே வந்து கருணையுடன் நீ(ர்)பொழிந்தாய்
சீர்மிகுநீ வாழ்க செழித்து

Sunday, August 2, 2015

இல்லை எவரும் எதிர்த்திடவே (எழிசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

கிளைஞர் எனநீ பிறரை எண்ணு
       கிடைத்திடும் பலரின் உறவுனக்கு
களைக தீய இயல்புகள் தம்மைக்
       காவியம் கூடப் போற்றுமுனை
விளையும் பற்பல நன்மைகள் எல்லாம்
       வெற்றிகள் உன்னைத் தேடிவரும்
இளைஞர் சக்தி ஒன்றாய்ச் சேர்த்திடவே
       இல்லை எவரும் எதிர்த்திடவே

Thursday, July 2, 2015

நிச்சயம் புகழ்நமைத் தேடி வரும் (எழுசீர்க்கழி நெடிலெடி ஆசிரிய விருத்தம்)

ஆர்வம் கொண்டு செயல்படும் போது
        அகிலம் நம்மைப் போற்றிடுமே
சோர்வே இன்றி உழைக்கும் போது
        சுற்றும் உலகம் நம்வசமே
வேர்வை சிந்திப் பாடு பட்டால்
       வெற்றிகள் வந்து குவிந்திடுமே
நேர்மை நமது கொள்கை என்றால்
       நிச்சயம் புகழ்நமைத் தேடிவரும்

Tuesday, June 2, 2015

நல்வாழ்வு (வெளிவிருத்தம்)

சாதி பேதம் சாய்த்திட வருமே – நல்வாழ்வு
நீதி என்றும் நின்றிட வருமே – நல்வாழ்வு
தீதில் லாத திண்மையால் வருமே – நல்வாழ்வு
ஓதிய சான்றோர் வழிசெல வருமே – நல்வாழ்வு

Saturday, May 2, 2015

திகழும் பாரதம் புகழுடனே (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


காமன் வெல்த்துப் போட்டிகளில்
       கண்டோம் இரண்டாம் இடந்தன்னை
நாமினும் கொஞ்சம் முயன்றிருந்தால்
       நமக்கே முதலிடம் கிடைத்திருக்கும்
மேம்படும் உணர்வுடன் முயன்றிட்டால்
       மேவிடும் பலப்பல வெற்றிகளே
தீங்கனி நிகர்த்த வெற்றிகளால்
       திகழும் பாரதம் புகழுடனே

Thursday, April 2, 2015

சுப்பிரமணிய சிவா (அறுசீர்க் கழ்நெடிலடி ஆசிரிய விருத்தம்)

தாய்த்திரு நாட்டிற் காகத்
      தன்னுடல் தன்னில் பற்றும்
நோய்தொழு நோயைப் பெற்று
      நுவலரும் இன்பம் எய்தி
தூய்த்திரு மேனி குன்றித்
      துடித்தநல் சுப்ர மண்ய
சேய்சிவா பிறந்த ஊரெம்
      திண்டியின் வத்தலக் குண்டாம்

Monday, March 2, 2015

கொடைக்கானல் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

வெள்ளியை உருக்கி விடல்போல
      வீழும் வெள்ளி நீர்வீழ்ச்சி
துள்ளிடும் மீனைப் போல்படகு
      செல்லும் தௌ;ளிய நீரேரி
வெள்ளிய மஞ்சாம் ஆடையினை
      உடுத்தி விளங்குது தூண்பாறை
அள்ளிடும் மனத்தை மலர்தம்மின்
      அழகே அவ்வூர் கொடைக்கானல்

Monday, February 2, 2015

திண்டுக்கல் மாவட்டம் (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பூட்டுடன் வாசம் வீசும்
      புகையிலே மலையின் கோட்டை
சூட்டுநல் வாசப் பூக்கள்
      சுவைமிகு திராட்சை வாழ
வேட்டுபல் லோரும் காண
      விரைகிற கோடைக் கானல்
பாட்டுள வேலன் கோவில்
      பலநலம் திண்டுக் கற்கே

Friday, January 2, 2015

குறுந்தொகை (இருவிகற்ப நேரிசை வெண்பா)

மலரினும் மெல்லிய காமத்தை மாண்பாய்ச்
சிலஅடிகள் தம்மாலே செப்பும் - நலமார்
குறுந்தொகை தன்னைக் குறிப்பிடுக நம்மின்
நறுந்தொகை நூலெனவே நன்கு

Tuesday, December 2, 2014

இன்மொழியைக் காக்க எழுவோம் (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)

தென்னவரைத் தாழ்த்தியுரை மன்னவரின் சென்னிதனில்
மன்னுபுகழ் மேருமலைக் கல்வைத்தான் - அன்னவனின்
பின்னவர்கள் நாமென்று பேச்சளவில் நில்லாமல்
இன்மொழியைக் காக்கஎழு வோம்

Sunday, November 2, 2014

செழிப்பாகும் உலகே

மழைபெய்து பயிர்கள்
தழைத்தோங்கின் உழவர்
உழைப்பார்கள் உவந்தே
செழிப்பாகும் உலகே

Thursday, October 2, 2014

தேனைப்பாய்ச்சும் செம்மொழி (வஞ்சிவிருத்தம்)

அன்றும் இன்றும் கன்னியாய்
வென்று நிற்கும் செந்தமிழ்
இன்பத் தேனைக் காதினில்
என்றும் பாய்ச்சும் செம்மொழி

Tuesday, September 2, 2014

என்னவள்

மான்போன்ற விழியினள்
தேன்போன்ற மொழியினள்
ஈன்றாள்போல் இனியவள்
நான்தேடு கனியவள்

Saturday, August 2, 2014

தமிழைத் தழைக்கச் செய்வது கடனே (வஞ்சிவிருத்தம்)

தமிழ்மொழி தரணியின் தலைமொழியாம்
அமிழ்தினை அனையநல் அருமொழியாம்
நமதிரு விழிநிகர் நலமொழியாம்
தமிழினைத் தழைத்திடச் செயல்கடனே

Wednesday, July 2, 2014

தானாய் மலரும் பலநலங்கள் (வஞ்சிவிருத்தம்)

தேனாய் இனிக்கும் தமிழ்மொழியை
ஊனாய் உயிராய் மதித்தொழுகின்
வானாய் உயரும் வழிபிறக்கும்
தானாய் மலரும் பலநலங்கள்

Monday, June 2, 2014

உழவருளம் மகிழும் (இருவிகற்ப நேரிசை வெண்பா)


கார்முகிலின் ஓட்டத்தைக் கண்டு கவின்மயில்
ஏர்மிகுந்த தோகைவிரித் தாடுதல்போல் - நீர்வரவே
நல்லேர் உழவருளம் நன்றாய் மகிழ்வுறும்தம்
நெல்லும் கரும்பும் நினைத்து

Friday, May 2, 2014

நேதாஜியை நெஞ்சில் வைப்போம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


அன்னியர் ஆட்சியை அகற்றுதற்கு
      ஆயுத வழியே ஏற்றதெனச்
சொன்னவர் யார்? நம் நேதாஜி
      சொல்லிய வண்ணம் படைதிரட்டிப்
பொன்னிகர் பாரத பூமிக்குப்
      புண்ணிய இன்னுயிர் தனையீந்த
மன்னவர் தன்னைநம் மனம்சேர்ப்போம்
      மாசறு அவரது வழிநடப்போம்

Wednesday, April 2, 2014

பைந்தமிழ்த்தேர்ப் பாகன் பாரதி (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


விடுதலை உணர்வைத் தீப்போல
      விளைத்தவன் யார்?அவன் பாரதியே
கெடுதல் இல்லாச் சமுதாயம்
      கிளைத்திடச் செய்ததும் அவன்தானே?
அடுக்களைப் பெண்களை ஆண்களொடு
      அவனியில் வலம்வரச் செய்ததனால்
உடுக்களை நிகர்த்திடும் கவிஞருளே
      உதிக்கும் ஞாயிறு அவனாவான்

Sunday, March 2, 2014

காமராசருக்கு நிகர் யார்? (இருவிகற்ப நேரிசை வெண்பா)


கல்வியெனும் கண்திறந்த காமராசர் மாணவர்க்கு
நல்லுணவும் சீருடையும் நல்கவைத்தார் - நல்லிதயம்
கொண்டஇவர் போலிங்கு யார்வருவார்? கோமகனைக்
கொண்டிடுவோம் நம்மனத்தி லே.

Thursday, January 2, 2014

நல்லாசிரியர் (நேரிசை ஆசிரியப்பா)


ஒழுக்கம் இரக்கம் இறைமை கொள்கை
விழுப்பம் மிக்க கலைகளில் தேர்ச்சி
தொகுத்துக் கூறும் வன்மை மேன்மை
பகுத்துக் காணும் உலகியல் அறிவு
சான்றோர் போற்றும் சால்பாம் குணங்கள்
வான்றோய் மலைபோல் வளமோ டுயர்வு
நிலமதை யொத்த திண்மை பொறுமை
நலமிகு நிறைகோல் போன்ற நடுநிலை
மணத்தோடு மலரும் மலர்போல் மாட்சி
குணத்குயர் வோரே நல்லா சிரியர்
நன்னூல் நவிலுமிந் நலமோடு
பன்னெடுங் காலம் பார்மிசை வாழ்கவே!