Saturday, May 2, 2015

திகழும் பாரதம் புகழுடனே (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


காமன் வெல்த்துப் போட்டிகளில்
       கண்டோம் இரண்டாம் இடந்தன்னை
நாமினும் கொஞ்சம் முயன்றிருந்தால்
       நமக்கே முதலிடம் கிடைத்திருக்கும்
மேம்படும் உணர்வுடன் முயன்றிட்டால்
       மேவிடும் பலப்பல வெற்றிகளே
தீங்கனி நிகர்த்த வெற்றிகளால்
       திகழும் பாரதம் புகழுடனே

Thursday, April 2, 2015

சுப்பிரமணிய சிவா (அறுசீர்க் கழ்நெடிலடி ஆசிரிய விருத்தம்)

தாய்த்திரு நாட்டிற் காகத்
      தன்னுடல் தன்னில் பற்றும்
நோய்தொழு நோயைப் பெற்று
      நுவலரும் இன்பம் எய்தி
தூய்த்திரு மேனி குன்றித்
      துடித்தநல் சுப்ர மண்ய
சேய்சிவா பிறந்த ஊரெம்
      திண்டியின் வத்தலக் குண்டாம்

Monday, March 2, 2015

கொடைக்கானல் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

வெள்ளியை உருக்கி விடல்போல
      வீழும் வெள்ளி நீர்வீழ்ச்சி
துள்ளிடும் மீனைப் போல்படகு
      செல்லும் தௌ;ளிய நீரேரி
வெள்ளிய மஞ்சாம் ஆடையினை
      உடுத்தி விளங்குது தூண்பாறை
அள்ளிடும் மனத்தை மலர்தம்மின்
      அழகே அவ்வூர் கொடைக்கானல்

Monday, February 2, 2015

திண்டுக்கல் மாவட்டம் (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பூட்டுடன் வாசம் வீசும்
      புகையிலே மலையின் கோட்டை
சூட்டுநல் வாசப் பூக்கள்
      சுவைமிகு திராட்சை வாழ
வேட்டுபல் லோரும் காண
      விரைகிற கோடைக் கானல்
பாட்டுள வேலன் கோவில்
      பலநலம் திண்டுக் கற்கே

Friday, January 2, 2015

குறுந்தொகை (இருவிகற்ப நேரிசை வெண்பா)

மலரினும் மெல்லிய காமத்தை மாண்பாய்ச்
சிலஅடிகள் தம்மாலே செப்பும் - நலமார்
குறுந்தொகை தன்னைக் குறிப்பிடுக நம்மின்
நறுந்தொகை நூலெனவே நன்கு

Tuesday, December 2, 2014

இன்மொழியைக் காக்க எழுவோம் (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)

தென்னவரைத் தாழ்த்தியுரை மன்னவரின் சென்னிதனில்
மன்னுபுகழ் மேருமலைக் கல்வைத்தான் - அன்னவனின்
பின்னவர்கள் நாமென்று பேச்சளவில் நில்லாமல்
இன்மொழியைக் காக்கஎழு வோம்

Sunday, November 2, 2014

செழிப்பாகும் உலகே

மழைபெய்து பயிர்கள்
தழைத்தோங்கின் உழவர்
உழைப்பார்கள் உவந்தே
செழிப்பாகும் உலகே