Friday, September 21, 2012

பெலிண்டா காவியம் - பாகம் 5


பகுதி 3

ஹாம்டன் பகுதியில் நிகழ்ந்தன

64. மலரதை மகுட மாகச்
        சூடிடும் பச்சை வண்ண
    நலமிகு புல்வெ ளியை
        நண்ணிய மாட கூடம்
    குலமதில் தோன்றி னோரும்
        கூடிடும் வெளிநாட் டோரும்
    உலவிடும் ஹாம்டன் தன்னில்
        ஒவ்வொரு முறையும் இராணி...

65.  ஒப்பரும் அன்னே கூட்டும்
        உயர்கூட்டம் நடக்கும் சின்னாள்
    செப்பரும் தேநீர்க் கூட்டம்
        சிறப்புற நடக்கும் சின்னாள்
    ஒப்பிலாக் காளை யோடு
        ஒளிதிகழ் கன்னி வந்து
    உப்புக்கும் பயன்ப டாத
        உரையதும் நடக்கும் அங்கே

அரசியின் பெயர்

66.  யாருடை நடனம் அங்கே
        நடந்தது என்றோ? இல்லை
    யார்போன விருந்திற் காகச்
        செலவிட்டார் என்றோ? இல்லை
    பார்போற்றும் அன்னே தன்னைப்
        பற்றியோ? அன்றிப் பார்த்த
    சீரார்ந்த இந்தி யாவின்
        திரைப்படம் குறித்தோ? மேலும்...

67. அசைவுகள் பார்வை மற்றும்
        அழகிய கண்கள் பற்றி
    இசைவுடன் விளக்கம் சொல்லல்
        இவையுமே நிகழக் கூடும்
    விசிறிகள் நாசித் தூளின்
        விநியோகம் இவற்றின் ஊடே
    இசையுடன் பாடல் மிக்க
        எழுச்சியாய்ச் சிரித்தல் கண்ணைச்....

68.  சிமிட்டியே காதல் சொல்லைச்
        சிலர்பரி மாறிக் கொள்ளல்
    அமர்ந்துள நடுவர் தங்கள்
        அடிவயிற் றுள்ளே வாட்டும்
    சுமையதாம் பசியி னோடு
        தோன்றிய தீர்ப்பைத் தீட்டல்
    அமைதியோ டயல்நாட் டோர்தாம்   
        அவண்உலா வருவார் ஆனால்....

69.  உழன்றிடும் உள்ளத் தோடு
        உலவுவர் உழைக்கும் வர்க்கம்
    நிலந்தனில் இரண்டு வர்க்கம்
        நிலைப்பது இயற்கை போலும்
    வளம்தரும் வர்க்கம் வாட்டம்
        அடைதலும் அவர்உ ழைப்பால்
    வளம்பெற வாழ்வோர் நல்ல
        வாழ்வினை அடைதல் ஏனோ?


சூதாட்டம் நிகழல்

70.  அழகதன் சிகரம் ஆன
        அணியிழை பெலிண்டா தன்னால்
     கழகமார் இரண்டு வீரர்
         சீட்டாட்டக் களத்தில் மோதி
     எழில்மிகு பெலிண்டா தன்னை
         ஏற்றிட ஆட லுற்றார்
     சுழன்றன அவர்தம் கையில்
         சூதாட்டச் சீட்டுக் கட்டு.
  
71.  ஆரணங் கவள்தன் கையை
         அசைத்திட்ட வேளை தன்னில்
    ஏரியல் முதலாம் தேவ
         காவலர் களமி றங்கி
    சீர்மிகு சீட்டின் மீது
         சிறப்புற அமர்ந்து கொள்ள
    போரதாம் சூதுப் போர்தான்
        பொலிவுடன் நடந்த தங்கே
  
72.  மீசையும் தாடி கொண்ட
        மிடுக்கான அரசர் நால்வர்
    ஆசையைத் தூண்டும் நல்ல
        அரசியர் நால்வ ரோடு
    மேசையின் விரிப்பின் மீது
        மிகஎழில் வண்ணம் கொண்ட
    வேசையை போன்ற சீட்டு
        விரைவினில் இறங்கிற் றம்மா

73.  ஸ்பேடது வெல்க என்று
        பெண்ணெழில் பெலிண்டா சொல்ல
    ஸ்பேடதே வெற்றி கொள்ள
        பெருமகிழ் வுற்ற தங்கே
    ஸ்பேடிலி யோதான் வெற்றி
        பெற்றிட்டான் முதலில் அங்கு
    மானிலி யோதான் தோற்று
        மண்டியிட் டானே அந்தோ

சீட்டுக்ககளில் ஓரினச்சீட்டு

74.  தொடர்ந்துசூ தாட்டப் போரில்
        துணிவுடன் பாஸ்டோ வந்தான்
    அடர்ந்தவன் விதியி னாலே
        அமைந்தில நல்ல சீட்டு
    இடருடன் அவனின் ஆட்டம்
         இறுதியாய்ப் போன பின்பு
    சுடருடன் பாம்தான் வந்தான்
         சூதாட்டக் களத்தை நாக்கி.

75.  பாமவன் பின்னர் வந்த
        பாங்குடை ஓவும் போரில்
    தாமுளம் உடையும் வண்ணம்
        தழுவினான் தோல்வி தன்னை
    தாமரை மலரைப் போன்ற
        தகுதிசால் பெலிண்டா என்னும்
    பூமகள் வென்றாள் சூதுப்
        போரிலே பூமிப் போடு

Wednesday, September 5, 2012

பெலிண்டா காவியம் - பாகம் 4


தேவ கூட்டத்தின் பணிகளாக ஏரியல் உரைத்தவை

50.  ஏரியல் தேவ கூட்டத்
        திடையினில் தோன்றிக் கையில்
    ஏருடன் விளங்கும் செங்கோல்
        ஏந்திய வண்ணம் நின்று
    கூறத்தான் தொடங்க லுற்றான்
        கொடுப்பீர் உம்செவிகள் தம்மை
    பாரிலே நமக்கென் றுள்ள
        பற்பல கடமை கேட்பீர்

51.  எல்லையில் வானின் மீதும்
        இடையுள பரப்பின் மீதும்
    மெல்லவே வீசும் தென்றல்
        மெதுவாகப் பொழியும் தூறல்
    நல்லஅம் மழையின் யின்பு
        நலமுடன் தோன்றும் வண்ண
    வில்லதும் நம்மின் செய்கை
        விளம்புவேன் இன்னும் கேட்பீர்

52.  மண்ணுல கதனில் வாழும்
        மானிட இனத்தார் தம்மின்
    தன்னியல் பதனை நோக்கல்
        தகுந்தநல் வழியில் சேர்த்தல்
      வண்ணநல் மலர்கள் மற்றும்
        வானவில் தன்னின் வண்ணம்
      தன்னினை எடுத்து மாந்;தர்
        தலைமயிர் வண்ணம் மாற்றல்....

53.  கன்னத்தில் நாணச் செம்மை
        கவினுற மிகைக்கச் செய்தல்
    எண்ணத்தின் செம்மை தன்னை
        ஏற்றமாய்ச் செய்தல் மேலும்
    என்னதான் நிகழ்க் கூடும்
        என்பதை எடுத்துச் சொல்லல்
    இன்னபல் பணிகள் நம்மின்
        இணையிலாப் பணிகள் ஆகும்.

தேவகூட்டத்திற்கு ஏரியலின் எச்சரிக்கை

54.  இன்றுநம் தேவ கூட்டம்
        எதிரிகொளும் தீங்கொன் றுண்டு
    இன்னதென் றதனை நானும்
        இன்னமும் அறிய வில்லை
    நன்னல முடையார் யார்க்கோ
        நலிவொன்று வருதல் கூடும்
    வன்மையால் மெலியார் யார்க்கோ
        வருத்தமொன் றெய்தல் கூடும்.

55.  உன்னத ஒழுக்கம் தன்னில்
        உடைப்பது நிகழக் கூடும்
    சின்னதோர் சீனக் கிண்ணம்
        சிறுவிரி வடையக் கூடும்
    வன்னமுள் பெலிண்டா தன்னின்
        வழிப்பாட்டை மறக்கக் கூடும்
    இன்னல நடனம் ஆட
        இயலாமல் போகக் கூடும்

56. தன்னுடை இதயம் தன்னைத்
        தான்பறி கொடுத்தல் கூடும்
    மின்னுநல் கழுத்தின் பூணை
        மேடையில் தொலைக்கக் கூடும்
      தன்னுடை செல்ல நாயாம்
        ஸாக்கது தொலையக் கூடும்
    என்னதான் நிகழும் என்று
        இயம்புதல் வல்லேன் அல்லேன்.

57.  அச்சமே ஊட்டும் சூழல்
        அதுதனில் நீங்கள் எல்லாம்
    எச்சரிப் புடனே நின்று
        எதிர்வரும் கேட்டை நீக்க
    நிச்சயம் முயல வேண்டும்
        நீரதை விரைவில் செய்வீர்
    மெச்சிடும் வகையில உங்கள்
        மேன்மையாம் செய்கை வேண்டும்

ஏரியல் பணிகளைப் பகிர்ந்தளித்தல்

58.  பெலிண்டா வின்-கை விசிறி
        பேணுக ஜிஃப்பி ரட்டா
    பொலிவுடைக் கரிதன் தொங்கல்
        போற்றுக பிரில்லி யண்டே
    எழிவான கடிகா ரத்தை
        என்னுடை மொமென்டில் லாடார்
    அழகான கூந்தல் கற்றை
        அதுதனைக் கிரிஸ்பிஸா காப்பாய்
    தேவதைகளின் பெயர்கள்   

59.  பெலிண்டாவின் செல்ல நாயைப்
        பேணுவேன் நானே இன்னும்
    வலிவுடன் தேர்வு செய்யும்
        வல்லதோர் கூட்டம் கூடி
    மெலியநல் இடையில் உள்ள
        மிகஎழில் உடையைக் காப்பீர்
    புலிநிகர் ஆற்ற லோடு
        புகழுடை பெலிண்டா காப்பீர்

60.  ஏழடுக் காக உள்ள
        எழில்மிகு ஆடை தன்னில்
    வாலுடைக் கொக்கி யோடு
        வன்திமிங் கலத்தின் என்பும்
    சீலமாய் அமைந்த போதும்
        சீரிய வளையம் போலக்
    கோலமாய் நின்று காப்பீர்
        கொடிதெதும் நிகழா வண்ணம்.

ஏரியலின் அச்சுறுத்தல்

61. எந்தவோர் தேவ கூட்டம்
        இட்டதோர் பணியில் சோர்ந்தால்
    சிந்தையில் கவனம் இன்றிச்
        செயல்தமை மறந்தால் தன்பால்
    தந்தவோர் பணியைச் செய்யத்
        தவறினால் தருவேன் தண்டம்
    அந்தமில் தண்ட னைக்கு
        ஆளாக நேரும் நீரே

62. இறகடிக் கியலா வண்ணம்
        இளகிய பசையால் ஒட்டிக்
    கறங்குபோல் சுற்று கின்ற
        கருவியில் பிணைத்து மற்றும்
    கிறங்கிடச் செய்யும் வண்ணம்
        கிளர்புகை அறையில் போட்டு
    இறந்திடும் அளவுக் கிங்கே
        இன்னல்கள் செய்வேன் காணீர்

63.  இங்ஙனம் ஏரி யல்தான்
        இயம்பிடப் பாய்ம ரத்தில்
    தங்கிய தேவ கூட்டம்
        தானது இறங்கி வந்து
    தங்களுக் கிட்ட செய்கை
        தாம்செயத் தொடங்க லானார்
    பொங்கெழில் பெலிண்டா கூந்தல்
        பொலிகூந்தல் கற்றை காத்தார்

Monday, September 3, 2012

பெலிண்டா காவியம் - பாகம் 3


பேரனின் வேள்வி

39.  காதலின் தெய்வ மான
        கரும்புவில் வேளை வேண்டி
        ஆதவன் உதிக்கும் முன்னம்
            ஆங்கவன் வேள்வி செய்தான்
      காதலைப் பற்றிப் பேசும்
        காவியம் பலவும் முன்னைக்
      காதலி மார்கள் தந்த
       கையுறைப் பொருள்கள் யாவும்...

40.  வேள்வியின் சமித்து ஆக
        விளங்கிடச் செய்து தீயை
    நாள்தொறும் தனக்கு வந்த
        நனிபல காதல் ஓலைத்
    தாள்களைக் கொண்டு அங்கே
        தழைத்திடச் செய்தான் பின்னர்
    மூளுமத் தீயைத் தூண்ட
        முப்பெரு மூச்சும் விட்டான்

41.  மண்டியே எரியும் வேள்வித்
        தீமுனம் மண்டி யிட்டுக்
    கண்களை மூடி யேதன்
        கரையிலா ஆசை தன்னை
    விண்டிடத் தொடங்கி னானே
        பேரனும் வேளை நோக்கிப்
    பெண்டிருள் அழகில் மிக்காள்
        பேரெழில் கூந்தல் தன்னை...

42.  பெற்றிட அருளு வாயே
        பேரருள் காட்டு வாயே
    மற்றவள் கூந்தல் தன்னை
        மட்டிலாக் காலம் மட்டும்
    பெற்றநான் பேணல் வேண்டும்
        பெருமகிழ் வெய்த வேண்டும்
    பொற்பதம் பற்றி யேநான்
        கேட்கிறேன் காதல் தேவா

மன்மதன் பாதிவரமே அருளல்

43.  மேற்படி வரங்கள் தம்மை
        மேன்மைகொள் காளை கேட்டான்
    வேற்படைக் கண்ணி னாளாம்
        ரதியுடைக் கேள்வன் காதில்
    காற்றது அடித்த தாலே
        காத்திட அருள்வாய் என்று
    சாற்றிய மொழிகள் எல்லாம்
        சரிவரக் கேட்க வில்லை

44.  ஆதலால் காதல் தேவன்
        ஆங்கந்தப் பேரன் என்பான்
    காதலால் கேள்வ ரத்தில்
        காரிகை கூந்தல் எய்தும்
    பாதியை மட்டும் அங்கே
        பலித்திட அருளே செய்தான்
    மீதியோ காற்றுத் தேவன்
        மேனியில் கலந்தே கிற்றே.

45.  ஓவியம் ஒத்தே நிற்கும்
        ஒப்பரும் ஓடம் தேம்ஸில்
    தாவியே துள்ளும் நல்ல
        தண்ணலை தழுவிச் செல்லும்
    காவியம் சமைத்தான் அந்தக்
        கதிரெனும் கவிஞன் தன்னின்
    ஆயிரம் கரங்கள் தன்னால்
        அவ்வலைத் தாள்கள் மீது.
   
ஏரியல் தேவதைகளை அழைத்தல்

46.  ஆயிழை பெலிண்டா என்னும்
        ஆய்மயில் சிரித்தாள்; இந்தப்
    பாய்திரைக் கடலால் சூழப்
        பட்டநல் உலகம் தன்னில்
    மேவிய தின்பம் அந்த
        மேன்மைகொள் விண்ணின் தேவன்
       பூவிழி மடந்தை எய்தும்
        புன்துயர் எண்ணிச் சோர்ந்தான்
   
47. குரலது கொடுத்தே தன்னின்
        தேவதைக் கூட்டம் தன்னை
    வருகெனச் சொன்னான் அங்கே
        வந்தன பல்லா யிரமாய்
    இருசிறை அடித்தே வந்து
        இறங்கியவ் வோடம் தன்னின்
    விரியெழில் துடுப்பில் வந்து
        விளங்கியே இருக்கும் மாதோ

தேவதைகளின் வருணனை

48.  ஓடத்தின் துடுப்பில் உள்ள
        தேவதைக் கூட்டம் தன்னின்
    பாடரும் எழிலைச் சற்றுப்
        பார்த்திட முனைவோம் இங்கே
    தேடரும் வண்ணம் மின்னும்
        செறியெழில் ஆடை கட்டி
    ஆடிடும் தென்றல் காற்றில்
        அசைத்திடும் இறக்கை தம்மை

49.  வானத்தின் வண்ணம் தோய்த்து
        வகைவகை யாக மின்னும்
    தேனொத்த மேனி தன்னில்
        திகழொளி படியும் போது
    காணற்கு இனிய தாகக்
        கவின்மிகு வண்ணம் மாறும்
    தானொத்த தேவ கூட்டம்
        தன்னுடைத் தலைவன் ஆன....