தேவ கூட்டத்தின் பணிகளாக ஏரியல் உரைத்தவை
50. ஏரியல் தேவ
கூட்டத்
திடையினில் தோன்றிக் கையில்
ஏருடன் விளங்கும் செங்கோல்
ஏந்திய வண்ணம் நின்று
கூறத்தான் தொடங்க லுற்றான்
கொடுப்பீர் உம்செவிகள் தம்மை
பாரிலே நமக்கென் றுள்ள
பற்பல கடமை
கேட்பீர்
51. எல்லையில் வானின் மீதும்
இடையுள பரப்பின் மீதும்
மெல்லவே வீசும் தென்றல்
மெதுவாகப் பொழியும் தூறல்
நல்லஅம் மழையின் யின்பு
நலமுடன் தோன்றும் வண்ண
வில்லதும் நம்மின் செய்கை
விளம்புவேன் இன்னும் கேட்பீர்
52. மண்ணுல கதனில் வாழும்
மானிட இனத்தார் தம்மின்
தன்னியல் பதனை
நோக்கல்
தகுந்தநல் வழியில் சேர்த்தல்
வண்ணநல் மலர்கள் மற்றும்
வானவில் தன்னின் வண்ணம்
தன்னினை எடுத்து மாந்;தர்
தலைமயிர் வண்ணம் மாற்றல்....
53. கன்னத்தில் நாணச்
செம்மை
கவினுற மிகைக்கச் செய்தல்
எண்ணத்தின் செம்மை தன்னை
ஏற்றமாய்ச் செய்தல் மேலும்
என்னதான் நிகழ்க் கூடும்
என்பதை எடுத்துச் சொல்லல்
இன்னபல் பணிகள் நம்மின்
இணையிலாப் பணிகள் ஆகும்.
தேவகூட்டத்திற்கு ஏரியலின் எச்சரிக்கை
54. இன்றுநம் தேவ
கூட்டம்
எதிரிகொளும் தீங்கொன் றுண்டு
இன்னதென் றதனை
நானும்
இன்னமும் அறிய
வில்லை
நன்னல முடையார் யார்க்கோ
நலிவொன்று வருதல் கூடும்
வன்மையால் மெலியார் யார்க்கோ
வருத்தமொன் றெய்தல் கூடும்.
55. உன்னத ஒழுக்கம் தன்னில்
உடைப்பது நிகழக் கூடும்
சின்னதோர் சீனக்
கிண்ணம்
சிறுவிரி வடையக் கூடும்
வன்னமுள் பெலிண்டா தன்னின்
வழிப்பாட்டை மறக்கக் கூடும்
இன்னல நடனம்
ஆட
இயலாமல் போகக்
கூடும்
56. தன்னுடை இதயம்
தன்னைத்
தான்பறி கொடுத்தல் கூடும்
மின்னுநல் கழுத்தின் பூணை
மேடையில் தொலைக்கக் கூடும்
தன்னுடை செல்ல நாயாம்
ஸாக்கது தொலையக் கூடும்
என்னதான் நிகழும் என்று
இயம்புதல் வல்லேன் அல்லேன்.
57. அச்சமே ஊட்டும் சூழல்
அதுதனில் நீங்கள் எல்லாம்
எச்சரிப் புடனே நின்று
எதிர்வரும் கேட்டை நீக்க
நிச்சயம் முயல வேண்டும்
நீரதை விரைவில் செய்வீர்
மெச்சிடும் வகையில உங்கள்
மேன்மையாம் செய்கை வேண்டும்
ஏரியல்
பணிகளைப் பகிர்ந்தளித்தல்
58. பெலிண்டா வின்-கை விசிறி
பேணுக ஜிஃப்பி ரட்டா
பொலிவுடைக் கரிதன் தொங்கல்
போற்றுக பிரில்லி யண்டே
எழிவான கடிகா ரத்தை
என்னுடை மொமென்டில் லாடார்
அழகான கூந்தல் கற்றை
அதுதனைக் கிரிஸ்பிஸா காப்பாய்
தேவதைகளின் பெயர்கள்
59. பெலிண்டாவின் செல்ல நாயைப்
பேணுவேன் நானே இன்னும்
வலிவுடன் தேர்வு செய்யும்
வல்லதோர் கூட்டம் கூடி
மெலியநல் இடையில் உள்ள
மிகஎழில் உடையைக் காப்பீர்
புலிநிகர் ஆற்ற லோடு
புகழுடை பெலிண்டா காப்பீர்
60. ஏழடுக் காக உள்ள
எழில்மிகு ஆடை தன்னில்
வாலுடைக் கொக்கி யோடு
வன்திமிங் கலத்தின் என்பும்
சீலமாய் அமைந்த போதும்
சீரிய வளையம் போலக்
கோலமாய் நின்று காப்பீர்
கொடிதெதும் நிகழா வண்ணம்.
ஏரியலின் அச்சுறுத்தல்
61. எந்தவோர் தேவ கூட்டம்
இட்டதோர் பணியில் சோர்ந்தால்
சிந்தையில் கவனம் இன்றிச்
செயல்தமை மறந்தால் தன்பால்
தந்தவோர் பணியைச் செய்யத்
தவறினால் தருவேன் தண்டம்
அந்தமில் தண்ட னைக்கு
ஆளாக நேரும் நீரே
62. இறகடிக் கியலா வண்ணம்
இளகிய பசையால் ஒட்டிக்
கறங்குபோல் சுற்று கின்ற
கருவியில் பிணைத்து மற்றும்
கிறங்கிடச் செய்யும் வண்ணம்
கிளர்புகை அறையில் போட்டு
இறந்திடும் அளவுக் கிங்கே
இன்னல்கள் செய்வேன் காணீர்
63. இங்ஙனம் ஏரி யல்தான்
இயம்பிடப் பாய்ம ரத்தில்
தங்கிய தேவ கூட்டம்
தானது இறங்கி வந்து
தங்களுக் கிட்ட செய்கை
தாம்செயத் தொடங்க லானார்
பொங்கெழில் பெலிண்டா கூந்தல்
பொலிகூந்தல் கற்றை காத்தார்
No comments:
Post a Comment