பேரனின் வேள்வி
39. காதலின் தெய்வ மான
கரும்புவில் வேளை வேண்டி
ஆதவன்
உதிக்கும் முன்னம்
ஆங்கவன் வேள்வி செய்தான்
காதலைப் பற்றிப் பேசும்
காவியம் பலவும் முன்னைக்
காதலி
மார்கள் தந்த
கையுறைப் பொருள்கள் யாவும்...
40. வேள்வியின் சமித்து ஆக
விளங்கிடச் செய்து தீயை
நாள்தொறும் தனக்கு வந்த
நனிபல காதல் ஓலைத்
தாள்களைக் கொண்டு அங்கே
தழைத்திடச் செய்தான் பின்னர்
மூளுமத் தீயைத் தூண்ட
முப்பெரு மூச்சும் விட்டான்
41. மண்டியே எரியும் வேள்வித்
தீமுனம் மண்டி யிட்டுக்
கண்களை மூடி யேதன்
கரையிலா ஆசை தன்னை
விண்டிடத் தொடங்கி னானே
பேரனும் வேளை நோக்கிப்
பெண்டிருள் அழகில் மிக்காள்
பேரெழில் கூந்தல் தன்னை...
42. பெற்றிட அருளு வாயே
பேரருள் காட்டு வாயே
மற்றவள் கூந்தல் தன்னை
மட்டிலாக் காலம் மட்டும்
பெற்றநான் பேணல் வேண்டும்
பெருமகிழ் வெய்த வேண்டும்
பொற்பதம் பற்றி யேநான்
கேட்கிறேன் காதல் தேவா
மன்மதன் பாதிவரமே அருளல்
43. மேற்படி வரங்கள் தம்மை
மேன்மைகொள் காளை கேட்டான்
வேற்படைக் கண்ணி னாளாம்
ரதியுடைக் கேள்வன் காதில்
காற்றது அடித்த தாலே
காத்திட அருள்வாய் என்று
சாற்றிய மொழிகள் எல்லாம்
சரிவரக் கேட்க வில்லை
44. ஆதலால் காதல் தேவன்
ஆங்கந்தப் பேரன் என்பான்
காதலால் கேள்வ ரத்தில்
காரிகை கூந்தல் எய்தும்
பாதியை மட்டும் அங்கே
பலித்திட அருளே செய்தான்
மீதியோ காற்றுத் தேவன்
மேனியில் கலந்தே கிற்றே.
45. ஓவியம் ஒத்தே நிற்கும்
ஒப்பரும் ஓடம் தேம்ஸில்
தாவியே துள்ளும் நல்ல
தண்ணலை தழுவிச் செல்லும்
காவியம் சமைத்தான் அந்தக்
கதிரெனும் கவிஞன் தன்னின்
ஆயிரம் கரங்கள் தன்னால்
அவ்வலைத் தாள்கள் மீது.
ஏரியல் தேவதைகளை அழைத்தல்
46. ஆயிழை பெலிண்டா என்னும்
ஆய்மயில் சிரித்தாள்; இந்தப்
பாய்திரைக் கடலால் சூழப்
பட்டநல் உலகம் தன்னில்
மேவிய தின்பம் அந்த
மேன்மைகொள் விண்ணின் தேவன்
பூவிழி மடந்தை எய்தும்
புன்துயர் எண்ணிச் சோர்ந்தான்
47. குரலது கொடுத்தே தன்னின்
தேவதைக் கூட்டம் தன்னை
வருகெனச் சொன்னான் அங்கே
வந்தன பல்லா யிரமாய்
இருசிறை அடித்தே வந்து
இறங்கியவ் வோடம் தன்னின்
விரியெழில் துடுப்பில் வந்து
விளங்கியே இருக்கும் மாதோ
தேவதைகளின் வருணனை
48. ஓடத்தின் துடுப்பில் உள்ள
தேவதைக் கூட்டம் தன்னின்
பாடரும் எழிலைச் சற்றுப்
பார்த்திட முனைவோம் இங்கே
தேடரும் வண்ணம் மின்னும்
செறியெழில் ஆடை கட்டி
ஆடிடும் தென்றல் காற்றில்
அசைத்திடும் இறக்கை தம்மை
49. வானத்தின் வண்ணம் தோய்த்து
வகைவகை யாக மின்னும்
தேனொத்த மேனி தன்னில்
திகழொளி படியும் போது
காணற்கு இனிய தாகக்
கவின்மிகு வண்ணம் மாறும்
தானொத்த தேவ கூட்டம்
தன்னுடைத் தலைவன் ஆன....
No comments:
Post a Comment