பகுதி 3
ஹாம்டன்
பகுதியில் நிகழ்ந்தன
64. மலரதை மகுட மாகச்
சூடிடும் பச்சை வண்ண
நலமிகு புல்வெ ளியை
நண்ணிய மாட கூடம்
குலமதில் தோன்றி னோரும்
கூடிடும் வெளிநாட் டோரும்
உலவிடும் ஹாம்டன் தன்னில்
ஒவ்வொரு முறையும் இராணி...
65. ஒப்பரும் அன்னே கூட்டும்
உயர்கூட்டம் நடக்கும் சின்னாள்
செப்பரும் தேநீர்க் கூட்டம்
சிறப்புற நடக்கும் சின்னாள்
ஒப்பிலாக் காளை யோடு
ஒளிதிகழ் கன்னி வந்து
உப்புக்கும் பயன்ப டாத
உரையதும் நடக்கும் அங்கே
அரசியின் பெயர்
66. யாருடை நடனம் அங்கே
நடந்தது என்றோ? இல்லை
யார்போன விருந்திற் காகச்
செலவிட்டார் என்றோ? இல்லை
பார்போற்றும் அன்னே தன்னைப்
பற்றியோ? அன்றிப் பார்த்த
சீரார்ந்த இந்தி யாவின்
திரைப்படம் குறித்தோ? மேலும்...
67. அசைவுகள் பார்வை மற்றும்
அழகிய கண்கள் பற்றி
இசைவுடன் விளக்கம் சொல்லல்
இவையுமே நிகழக் கூடும்
விசிறிகள்
நாசித் தூளின்
விநியோகம் இவற்றின் ஊடே
இசையுடன்
பாடல் மிக்க
எழுச்சியாய்ச் சிரித்தல் கண்ணைச்....
68. சிமிட்டியே காதல் சொல்லைச்
சிலர்பரி மாறிக் கொள்ளல்
அமர்ந்துள நடுவர் தங்கள்
அடிவயிற் றுள்ளே வாட்டும்
சுமையதாம் பசியி னோடு
தோன்றிய தீர்ப்பைத் தீட்டல்
அமைதியோ டயல்நாட் டோர்தாம்
அவண்உலா வருவார் ஆனால்....
69. உழன்றிடும் உள்ளத் தோடு
உலவுவர் உழைக்கும் வர்க்கம்
நிலந்தனில் இரண்டு வர்க்கம்
நிலைப்பது இயற்கை போலும்
வளம்தரும் வர்க்கம் வாட்டம்
அடைதலும் அவர்உ ழைப்பால்
வளம்பெற வாழ்வோர் நல்ல
வாழ்வினை அடைதல் ஏனோ?
சூதாட்டம்
நிகழல்
70. அழகதன் சிகரம் ஆன
அணியிழை பெலிண்டா தன்னால்
கழகமார் இரண்டு வீரர்
சீட்டாட்டக் களத்தில் மோதி
எழில்மிகு பெலிண்டா தன்னை
ஏற்றிட ஆட லுற்றார்
சுழன்றன அவர்தம் கையில்
சூதாட்டச் சீட்டுக் கட்டு.
71. ஆரணங் கவள்தன் கையை
அசைத்திட்ட வேளை தன்னில்
ஏரியல் முதலாம் தேவ
காவலர் களமி றங்கி
சீர்மிகு சீட்டின் மீது
சிறப்புற அமர்ந்து கொள்ள
போரதாம் சூதுப் போர்தான்
பொலிவுடன் நடந்த தங்கே
72. மீசையும் தாடி கொண்ட
மிடுக்கான
அரசர் நால்வர்
ஆசையைத்
தூண்டும் நல்ல
அரசியர் நால்வ ரோடு
மேசையின் விரிப்பின் மீது
மிகஎழில் வண்ணம் கொண்ட
வேசையை போன்ற சீட்டு
விரைவினில் இறங்கிற் றம்மா
73. ஸ்பேடது வெல்க என்று
பெண்ணெழில் பெலிண்டா சொல்ல
ஸ்பேடதே வெற்றி கொள்ள
பெருமகிழ் வுற்ற தங்கே
ஸ்பேடிலி
யோதான் வெற்றி
பெற்றிட்டான் முதலில் அங்கு
மானிலி
யோதான் தோற்று
மண்டியிட் டானே அந்தோ
சீட்டுக்ககளில்
ஓரினச்சீட்டு
74. தொடர்ந்துசூ தாட்டப் போரில்
துணிவுடன் பாஸ்டோ வந்தான்
அடர்ந்தவன்
விதியி னாலே
அமைந்தில நல்ல சீட்டு
இடருடன் அவனின் ஆட்டம்
இறுதியாய்ப் போன பின்பு
சுடருடன் பாம்தான் வந்தான்
சூதாட்டக் களத்தை நாக்கி.
75. பாமவன் பின்னர் வந்த
பாங்குடை ஓவும் போரில்
தாமுளம் உடையும் வண்ணம்
தழுவினான் தோல்வி தன்னை
தாமரை மலரைப் போன்ற
தகுதிசால் பெலிண்டா என்னும்
பூமகள் வென்றாள் சூதுப்
போரிலே பூமிப் போடு
No comments:
Post a Comment