Sunday, October 7, 2012

பெலிண்டா காவியம் - பாகம் 6

பேரன் சூதாட்டதிதில் வெல்லல்

76. வலியநல் விதியால் பேரன்
       வந்தனன் களத்தி னுள்ளே
மெலியவள் பெலிண்டா கொஞ்சம்
       மெதுவாகச் சரிய லுற்றாள்
பொலிவுடைப் பொருள்கள் தம்மைப்
       பெற்றனன் பேரன் தானும்
பொலிவுடை பெலிண்டா தன்னின்
       பேரெழில் முகந்தான் வெளிற....

77. நடுக்குறத் தொடங்கி விட்ட
       நங்கைதான் மேலும் மேலும்
திடுக்குறும் வகையில் பேரன்
       திறமையாய் ஆட லுற்றான்
மிடுக்குடை அவனின் வெற்றி
       மிகைப்படு ஆர்ப்ப ரிப்பை
அடுக்கடுக் காக அந்த
       அவையினில் உண்டாக் கிற்றே

காஃபி இடைவேளையில் பேரன் பெலிண்டாவின் கூந்தல் கற்றையைக் கத்தரிக்க முனைதல்

78. அரசியல் வாதி தம்மை
       அறிவுடை யோராய்ச் செய்யும்
உரம்மிக்க காஃபி அங்கே
       உள்ளவர் பருகி நின்றார்
அரைக்கண்ணை மூடிக் கொண்டு
       அசைவுதன்னைப் பார்த்த பேரன்
நுரைக்காஃபி தன்னின் ஆவி
       நுழைந்திட வேக முற்றான்.

79. ஒளிதரும் பெலிண்டா கூந்தல்
       ஒப்பிலாக் கூந்தல் கற்றை
களிதர அதனைத் தானே
       கவர்ந்திடப் பேரன் எண்ண
நளியிருள் அனைய கூந்தல்
       நறுக்கிட அவனின் தோழி
பளபள பேழை விட்டுக்
       கத்தரிக் கோலெ டுத்தாள்

80. முன்நின்று பகைவர் தாக்க
       முனைப்புடன் செல்வான் வீரன்
பின்நின்று பெலிண்டா கூந்தல்
       பிரித்திடச் சென்றான் பேரன்
மின்னிழை தலையைத் தாழ்த்தி
       மெல்திரை நதியைக் காண
என்னவோர் கொடுமை! பேரன்
       ஏந்திழை அறியா வண்ணம்.

தேவ கூட்டத்தன் முயற்சி

81. பொன்நிகர் கூந்தல் கற்றை
       போக்கிட எண்ணி நின்றான்
சின்னநல் தேவ கூட்டம்
       சின்னதம் சிறகால் கூந்தல்
தன்னினை அசைத்தும் நங்கை
       தன்னுடைக் காதில் உள்ள
மின்னணி தனையும் மூன்று
       முறையசைத் தவளை ஈர்க்க.....

82. மும்முறை தனிலும் பெலிண்டா
       மெதுவாகத் திரும்பிப் பார்க்கப்
பின்னிருந்த பேரன் சற்றுப்
       பின்னடைத் திருந்து கொண்டான்
அன்னம்போல் பெலிண்டா நெஞ்சம்
       அலைவுறல் தன்னைக் கண்ட
சின்னஏரி யல்தான் மங்கை
       சிந்தையை ஈர்க்கப் பார்க்க....

ஏரியல் செயலற்றுப்போதலும் பெலிண்டாவின் கூந்தல் கத்தரிக்கப்படலும்

83. அந்தவோர் வேளை தன்னில்
       அதிசய மாகத் தன்னின்
விந்தையாம் ஆற்றல் தன்னை
       விலகிய துணர்ந்து நொந்து
என்னநான் செய்வேன் என்று
       ஏரியல் திகைத்து நிற்க
மின்னலின் வேகத் தோடு
       பேரனின் கருவி கூந்தல்....

84. தன்னினைச் சிதைக்க மூடத்
       தொடங்கிட அந்தப் போதும்
பெண்ணவள் பெலிண்டா கூந்தல்
       பேணிட உயிரை ஈயும்
சின்னதோர் தேவ கூட்டம்
       vதியாகத் தால்பாது காக்கும்
எண்ணத்தில் இடையில் சென்று
       இரண்டாகிச் செத்துப் பின்னர்....

85. முன்னிலை அடைந்த தந்த
       மொய்ம்பதற் குள்ள தாலே
சின்னவோர் எண்ணங் கொண்டோன்
       செயல்பட மங்கை கூந்தல்
பின்னமாய்ப் போயிற் றந்தோ
       பெலிண்டாவின் கண்கள் தம்மில்
மின்னல்போல் கோபம் தோன்ற
       மீதெழு கூச்சல் இட்டாள்

பெலிண்டாவின் துன்பம்

86. விண்ணதும் அதிர்ந்த தம்மா
       விரிந்தஅவ் வோசை தானும்
தன்னுடைக் கணவன் மற்றும்
       தன்செல்ல நாயி ழந்தோர்
தன்னுடைச் சீனக் கிண்ணம்
       சிதைந்திட அழுவோர் தம்மின்
கண்ணின்நீர் தன்னி னோடு
       vகதறுதல் தன்னை ஒக்கும்

87. படுக்கையில் இருந்து வீழ்ந்த
       தலையணை யாலும் எண்ணில்
மிடுக்கிற எரியும் மெழுகு
       வர்த்திதான் அணைந்த தாலும்
நடுக்குற்று ட்ராய் நகரம்
       நலிவுற்று அழிந்த தாலும்
விடுக்கின்ற கண்ணீர் ஒக்கும்
       பெலிண்டாவின் கண்ணீர் அந்தோ

பகுதி 4

ஏரியலும் பிற தேவ கூட்டமும் அகலுதல்.

88. வெட்டிய கூந்தல் கற்றை
       விளங்கிழை பெலிண்டா தன்னைக்
கொட்டிட வைத்த கண்ணீர்
       குருஞ்சிறு தேவ கூட்டம்
கட்டிழந் தோடச் செய்யக்
       கண்ணீரி னோடு சென்றான்
கட்டளை தம்மைத் தந்த
       காவலன் ஏரி யலுமே.

அம்பிரியேல் வருகை

89. அவனியின் மையம் உள்ள
       அருங்குகை தன்னை விட்டுப்
பவனியாய்க் காற்று வீசாப்
       பாழிடம் தன்னை விட்டு
அவலத்தின் தேவன் ஆன
       அம்பிரி யேலே வந்தான்
இவணுள நிலைமை காண
       எண்ணியே வந்தான் அம்மா

பெலிண்டாவின் துயரநிலை

90. ஒளியதும் சென்றி டாமல்
       ஒருதிரை இட்டு உள்ளே
களியிலாச் சோக மூச்சைக்
       கட்டிலில் விட்ட வண்ணம்
எழில்மிகு பெலிண்டா துன்பம்
       ஏந்தியே கிடைந்தாள் பக்கம்
கழிபெரும் சோகம் கொண்ட
       காரிகை இருந்தார் மாதோ!

91. அவளது படுக்கை தன்னின்
       அருகிரு மடந்தை நின்றார்
கவலுறு தோற்றம் மற்றும்
       கவின்முகம் வேறு பட்டோர்
நவிலறும் கெட்ட பண்பு
       நலிந்தவோர் கிழவி போல
குவிந்தஓர் உடலைக் கொண்டு
       கூடவே நின்றாள் அங்கே

92. மெல்லவே மெல்லப் பேசி
       மேனிதான் நோயால் வாடி
உள்ளதே போல ஆடை
       உடுத்தியே நின்றாள் அங்கே
நள்ளிருள் இரவு ஆடை
       ஒவ்வொன்றும் ஒருநோய் காட்டும்
தௌளிய ஆவி ஒன்று
       திகழ்தரும் அரணின் மீது

அங்கிருந்த சில அதிசயங்கள்

93. உயிருள்ள தேநீர்ப் பானை
       உள்ளதோர் நிறுத்தி மற்றும்
உயிருடன் உலவு கின்ற
       உயரிய பரங்கிக் காயும்
உயிர்க்கின்ற ஜாடி யோடு
       உரக்கவே பேசும் வாத்து
உயிருள பெண்ணாம் பாட்டில்
       உரக்கவே மூடி கேட்கும்

மன்மதன் இரு பைகளுடன் வருதல்

94. பேரனின் வழிபா டதனைப்
       பெரிதாக விழையாக் காமன்
பாரமாய் விந்தைப் பைகள்
       தன்னிரு கையில் கொண்டு
வீரனாம் யுலிசிஸ் காற்றை
       விசையுடன் நிறுத்தல் ஒத்து
ஆரமாம் பையில் பெண்ணின்
       ஆழ்ந்தநல் ஈர மூச்சும்.....


95. பெண்களின் நெடுமூச் சோடு
       பேசரும் உணர்ச்சி கொண்டு
புண்படப் பேசும் நாக்கு
       புலம்பிடும் சோகம் மற்றும்
கண்களின் நீரும் எல்லாம்
       கலவையாய்க் கொண்ட பையை
மன்மதத் தேவன் ஏந்தி
       மயலுடன் கொண்டு சேர்த்தான்

பேரனின் ஏமாற்றம்

96. பெலிண்டாவின் கூந்தல் கற்றை
       இருந்திட்ட பையைப் பேரன்
மேலிதாகத் திறந்தான் ஆனால்
       மேன்மையாம் அந்தக் கற்றை
இலதாகத் திகைத்தான் பேரன்
       எல்லோரின் நிலையும் அஃதே
வலிதாகக் கவரும் ஏதும்
       வாய்க்காது என்றும் யார்க்கும்

பெலிண்டாவின் புலம்பல்

97. பக்கத்தில் இருந்த தோழி
       பரிவுடன் தன்னைப் பார்க்கத்
துக்கத்தில் இருந்த மங்கை
       முடிதுடித் தலறி நின்றாள்
திக்கெல்லாம் அவளின் கூச்சல்
       சென்றெதிர் ஒலித்த வேளை
மிக்கவோர் துயரம் தன்னால்
       மேன்மேலும் கேள்வி கேட்டாள்

98. இதற்காகத் தானா நீயும்
       இத்தனை கவனம் கொண்டாய்?
இதற்காகத் தானா கொண்டை
       ஊசியால் பிணைத்தாய் அந்தோ!
இதற்காகத் தானா அஃதில்
       வுhசனைப் பொருள்கள் சேர்த்தாய்
இதற்காகத் தானா சீப்பால்
       இழைத்திழைத் திழைத்தல் செய்தாய்?

99. இளைஞர்கள் பொறாமை கொண்டும்
       இளம்பெண்கள் உற்றுப் பார்த்தும்
கிளர்ந்தபல் நலங்கள் கொண்ட
       கிளர்எழில் கூந்தல் கற்றை
வளர்ந்தெழு அதனை வெட்ட
       வாட்டமே உற்றேன் உற்றேன்
தளர்ந்தவென் உள்ளத் தோடு
       தளர்ந்ததென் உடலும் ஐயோ!

பெலிண்டாவின் முறையீடு

100. மாண்புடை புளூமே இந்த
       மன்றிலே எந்தன் உள்ளம்
கிண்டிடும் வண்ணம் உற்ற
       கீழ்மைக்கு முறைமை சொல்லி
ஈண்டுநான் இழந்து போன
       எழில்மிகு கூந்தல் தன்னை
மீண்டுநான் பெறுதற் கேது
       மிகவும்நீர் செய்தல் வேண்டும்.

101. புளூமவர் தோற்றம் சொல்வோம்
       பொடிப்பெட்டி கையில் வைத்து
வளமுடன் நடைதான் போட
       வைத்துள கோலி னோடு
பளபள கண்க ளோடு
       பாமரச் சிந்தை யுள்ள
தளதள முகமே கொண்ட
       தனிப்பெரும் வல்லோர் ஆவார்

No comments: