Sunday, September 2, 2012

பெலிண்டா காவியம் - பாகம் 2


விழிக்கும் பெலிண்டாவின் கண்கள் காதல் கடிதப் பேழையைக் காணலும் அவளுக்கு ஏரியல் கூறியன மறந்து போதலும்

18.    பறந்திடும் பட்டுப் பூச்சி
        தன்னுடை இறகை ஒத்து
    சிறந்தநல் விழியின் மூடி
        திறந்தன சிலைநேர் பெண்ணாள்
    மறந்தனள் கனவில் வந்த
        மன்னவன் சொற்கள் தம்மை
    பறந்தன விழியாம் வண்டு
        மடல்மலர் பேழை நோக்கி

19.  மடல்கள்தாம் பலபேர் தம்மின்
        மட்டிலாக் காதல் தன்னைக்
    கடல்மடை திறந்தாற் போலக்
        காட்டிடும்;; பெலிண்டா தன்னின்
    உடலெழில் தனையே போற்றி
        உயர்கவி பாடும் இன்னும்
    கடல்நிகர் துன்பம் பேசும்;
        கணக்கிலாத் தவிப்பும் பேசும்

20.    இப்படி மடல்கள் பார்த்தாள்
        ஏரியல் மொழிகள் தம்மை
    எப்படி நினைவில் சேர்ப்பாள்
        ஏந்திழை மறந்தாள் அந்தோ!
    ஒப்பனைப் பொருள்கள் உள்ள
        ஓவியக் கூடம் நோக்கிச்
    செப்பரும் எழிலே கொண்ட
        சேயிழை நடந்தே சென்றாள்

நிலைக்கண்ணாடி முன்நிற்கும் பெலிண்டா ஒப்பனைசெய்தல்

21.    கண்ணோடிக் குதிக்கும் மீன்போல்
        கொண்டவள் ; சென்றாள்; நின்றாள்
    கண்ணாடி தன்னில் கண்டாள்
        கலையெழில் தோற்றம் ; கொண்டாள்
    விண்ணாடு உளதாம் தேவ
        மங்கைபோல் விளங்கும் ஆசை
    பண்ணோடு நிகராம் சொற்கள்
        பகர்ந்திடும் பாவை போன்றாள்.

22.    அலையலை யாக அங்கே
        அழகுசேர் பொருள்கள் ; தெய்வச்
    சிலையென பெலிண்டா நின்றால்
        செறிகுழல் பெட்டி அந்தச்
    சிலையினுக் கழகு சேர்க்கும்
        செயலினைப் புரிந்தாள் அங்கே
    மலையெனக் குவிந்தே உள்ள
        மாண்புடைப் பொருள்கள் காண்போம்

பெலிண்டாவின் பணிப்பெண்ணின் பெயர்

23.    கண்ணினைப் பறிக்கும் நல்ல
        காஸ்மீரக் கற்கள் ; அந்த
    விண்ணையும் மயக்கும் வாசத்
        தரபியப் பொருள்கள் ; இன்னும்
    மண்ணுள தேசம் கொண்ட
        மாண்புடைப் பொருள்கள் எல்லாம்
    எண்ணில் வாக ஆங்கே
        எழிலுற உளவாம் அம்மா!

24.    ஒப்பனைப் பொருள்கள் கூட்டம்
        ஒருபுறம் வண்ணம், சுண்ணம்
    அப்பொருள் குவியல் ஒட்டி
        ஆண்டவன் மைந்தன் வேதம்
    செப்பரும் புகழே கொண்ட
        விவிலிய நூலின் பக்கம்
    குப்பையை நிகர்க்கும் காதல்
        கடிதமாம் குவியல் பெட்டி

25.    ஒப்பனைப் பொருள்கள் உள்ள
        ஓங்கொளிப் பலகை தன்னில்
    இப்படிப் பொருள்கள் தாமும்
        இருப்பதாய்ச் சொன்னார் போப்பும்
    துப்பிதழ்ப் பெண்ணாள் நெஞ்சில்
        தூய்மைதான் இல்லை என்றே
    செப்பிட விழைந்தே இஃதைச்
        செகம்புகழ் கவிசொன் னாரோ?

26.    வீரன்போர்க் கோலம் கொள்ளும்
        விதமதை நிகர்க்கும் வண்ணம்
    கார்குழல் பெண்ணாள் அங்கே
        கவினெழில் கோலம் செய்தாள்
    ஓர்நொடி போனால் போதும்
        ஓப்பனை தன்னால் அந்தக்
    காரிகை அழகின் ஏற்றம்
        கற்பனைக் கெட்டா தம்மா!

27.    மங்கையின் எழிலோ முன்னர்
        மாசுறு மணிபோல், ஆனால்
    அங்கையின் சுண்ணம் சேர
        அதுவொளி வீசும் அந்தத்
    திங்கள்நேர் நுதலாள் கன்னம்
        சிவந்தநல் ரோஜா ஆகும்
    கொங்குசேர் மலர்போன் றாளின்
        குளிர்விழி மின்னல் பூக்கும் 

    பகுதி 2

28.    பெட்டியின் வேலை அங்கு
        பெரிதிலை நம்மின் கண்ணில்
    பட்டிடா வகையில் அங்கே
        பலப்பல விண்தே வதைகள்
    கட்டெழில் மங்கை தன்னின்
        கார்குழல் வகுக்கும் ; பின்னும்
    தட்டியே புடவை தன்னின்
        மடிப்பினைச் சரியாய்ச் செய்யும்

29.    மான்விழி போன்றாள் கண்ணில்
        மையினை எழுதும் நல்ல
    தேன்நிகர் மொழியே பேசும்
        சிவந்தநல் இதழோ ரத்தில்
    தானுள மச்சம் தன்னின்
        தனியெழில் பெருகச் செய்யும்
    கானுள யானைத் தந்தம்
        தனைநிகர் கழுத்தின் பக்கம்...

30.    அக்கழுத் தழகை மேலும்
        அற்புதம் ஆகக் காட்டிச்
    சொக்கிட வைக்கும் கற்றைச்
        சுருள்முடி செப்பம் செய்யும்
    தக்கவர் புகழை மண்ணில்
        தகவிலர் பறித்தல் போல
    மிக்கநல் அழகைச் செய்த
        புகழினை அடைந்தாள் பெட்டி

தேம்ஸ்நதிப் பகுதியில் பலரும் பெலிண்டாவின் அழகைக் கண்டு மயங்குதல்

31.    நல்லொளி வீசும் வண்ணம்
        தேம்ஸ்நதி நீரின் மீது
    எல்லவன் ஒளியே வீச
        ஏந்திழை கண்ணில் தோன்றும்
    தௌ;ளொளி பரவும் வேளை
        தேசினை இழந்தான் வெய்யோன்
    கள்ளதை உண்டார் ஆனார்;
        காரிகை அழகைக் கண்டார்

32.    அத்துணை பேரின் கண்ணும்
        அணங்கவள் மேலே; நல்ல
    புத்தொளிச் சிலுவை ஆரம்
        பூமகள் மார்பின் மேலே
    வித்தகன் ஏசாம் தேவன்
        விளம்பிய கொள்கை ஏற்காப்
    பித்தரும் அதனைக் கண்டு
        பெருந்துதி செய்கின் றாரே

33.    பாருள மக்கள் மீது
        பாகுபா டில்லா வண்ணம்
    தேரிலே குதிரை பூட்டித்
        திரிந்திடும் கதிரோன் தன்னின்
    சீருள கதிர்கள் தம்மைச்
        செம்மையாய்ப் பரப்பல் போலப்
    பேரெழில் பெண்ணாள் பார்வை
        பரவிடும் பல்லோர் மேலும்

34.    எழுதுங்கால் கோலைக் காணாக்
        கண்ணினைப் போலும் கொங்கன்
    பழியினைப் பார்க்கும் வேளை
        பார்த்திடாப் பாவை போலும்
    எழில்மிகு சிலைபோல் உள்ள
        ஏந்திழை முகமே நோக்கின்
    கழியுமே நினைவை விட்டுக்
        காரிகை குறைகள் எல்லாம்

35.    முடியினால் ஆக்கப் பட்ட
        வலையினால் பறவை வாழ்வு
    முடிவினை அடைதல் உண்டு
        அதனினால் மீனின் கூட்டம்
    மடிதலும் உண்டாம் ; ஆனால்
        மானிடர் கூட்டம் தன்னை
    முடியினால் முடியும் வித்தை
        முழுமதி முகத்தாள் செய்வாள்

36.    தளதள உடலாள் தன்னின்
        தந்தநேர் கழுத்தின் ஓரம்
    அளவினில் ஒன்றே யாகும்
        அணிமயிர் வளையம் ரெண்டு
    பளபள வெனவே மின்னும்
        பார்ப்பவர் நெஞ்சம் தன்னைக்
    களவிடும் ; கொள்ளை கொள்ளும் ;
        காதலும் கொள்ளச் செய்யும்.

பேரனின் விழைவு

37.    வீரமே விழையும் பேரன்
        விரும்பினான் மங்கை தன்னின்
    ஆரமே நிகர்க்கும் அந்த
        அணிமயிர் வளையம் தம்மை
    தீரமே கொண்டேர் சூழ்ச்சித்
        செயல்முறை கொண்டோ பெற்று
    வாரமாய் கொள்ளும் எண்ணம்
        வந்ததே அவனின் நெஞ்சில்
    பெலிண்டாவை நாடியவன்பெயர்

38.    தன்னுடை நெஞ்சில் வந்த
        தவிர்க்கரும் எண்ணம் தன்னால்
    தன்னிலை இழந்தான் பேரன்
        தவிக்கிறான் ஐயோ பாவம்
    மின்னிடைப் பெண்ணாள் தன்னின்
        மிளிர்கின்ற வளையக் கூந்தல்
    தன்னையே அடைதல் வேண்டித்
        தவமதும் செய்கின் றானே

No comments: