Friday, October 12, 2012

பெலிண்டா காவியம் - பாகம் 7 (நிறைவுப் பகுதி)


புளூம் வாதிடல்

102. வாதத்தைத் தொடங்கும் முன்னர்
            வனப்பான பொடியின் பெட்டி
தீதற்ற வண்ணம் அங்கே
            திறந்திட்டார் வாதம் தொட்டார்
காதுள்ள பேர்கள் கேளீர்
            கடவுளுக் கடுக்கா தய்யோ
மாதிவள் கூந்தல் ஈவீர்
            மங்கையின் துயரம் தீர்ப்பீர்

103. இவ்விதம் வாதம் செய்த
            எழிலுறு புளூம்பின் தன்னின்
செவ்விய பொடியின் பெட்டி
            செம்மையாய் மூடி வைத்தார்
பவ்விய மாக வாதம்
            தொடங்கவும், முடிப்ப தற்கும்
எவ்விதம் பொடியின் தேவை
            இருந்தது இதுவோர் விந்தை!

பெலிண்டா சபதம்

104. பேணிநான் வளர்த்த கூந்தல்
            பின்னமாய்ப் போன இந்நாள்
பேணுவார் அற்ற நாளாய்ப்
            போகட்டும் எந்த நாளும்
காணுவோர் அற்ற தீவில்
            கடியதோர் பாலை தன்னில்
மாணெழி லோடு பூத்து
            மலர்கின்ற ரோஜா ஆவேன்.

பெலிண்டா கண்டதீய சகுனங்களாகக் கூறியவை

105. ஊசிநூல் வைக்கும் பெட்டி
            ஒருமூன்று தடவை வீழ
நேசிக்கும் கிளியும், நாயும்
            நெறியின்றி நடக்கக் காற்று
வீசிடா வேளை கூட
            விளங்கிடு சீனக் கிண்ணம்
கூசுதல் போல ஆடக்
            கூறிய தேதோ ஒன்று ....

106. அப்பொழு ததனை எண்ணி
            ஆய்ந்திலன் ஆனால் அந்தோ
இப்பொழு திழந்து போனேன்
            எழில்மிகு கூந்தல் கற்றை
எப்படி அழகி னோடு
            இலங்கினேன் அந்தோ அந்தோ
இப்படிச் சிதையும் எந்தன்
            எழில்என நினைத்தேன் இல்லை

பகுதி – 5
பெலிண்டா அரங்கில் இருந்தோரிடம் பேசியது

107. ஈரமே சுமந்த கண்ணால்
            இரக்கமாய்ப் பார்க்கின் நீரே!
சாரமே போன உப்பால்
            தான்விளை பயன்தான் என்ன?
பாரமென் விதிமே லன்றிப்
            பகர்வதற் கொன்றும் இல்லை
வேரது போன பின்பு
            விளங்குமோ செடியின் வாழ்வு?

தேவதை க்ளாரிஸாவின்பேச்சு

108. ஏனிவண் அழகி னுக்கு
            இத்தனை புகழ்ச்சி மேலும்
ஏனிந்த அழகி னுக்கு
            இத்தனை மதிப்பு ஆய்வீர்
தானொரு நல்லி யல்பும்
            தகுதியும் இல்லா வேளை
வீணதே அழகு தானும்
            விளையுநற் பயனோ இல்லை.

109. சுருளான கற்றை தானும்
            சுருளற்ற கற்றை யேனும்
இருளேநேர் நிறத்தில் என்றும்
            இருந்திடல் இயலா தன்றோ?
உருவாக்கும் வண்ணம் தானும்
            உளதான வண்ணம் தானும்
ஒருநாளில் மறைந்தே போகும்
            உணர்ந்தாலே துன்பம் தீரும்.

க்ளார்ஸாவின் பேச்சு பயனற்றுப் போதல்

110. தேவதை தன்னின் பேச்சால்
            திகழொளி அரங்கம் தன்னில்
ஆவது எல்லாம் ஓர்நாள்
            அழிந்திடும் என்னும் ஞானம்
மேவிட வில்லை ஆனால்
            மீமிகை உணர்வே தோன்ற
யாவரும் கையைத் தட்டி
            ஆர்ப்பரித் தார்கள் இல்லை

அரங்கத்தில் நிகழ்ந்த ஆர்ப்பரிப்பு

111. பெலிண்டாவை நோக்கித் தீச்சொல்
            பேசினள் தோலஸ்டிரிஸ் அஃதால்
மெலிவான இரைச்சல் தோன்றி
            மெல்லவே வலுவ டைந்து
சிலவான சிறுமைச் சொல்லால்
            தீமைதான் விளையும் என்று
உலகோர்கள் அறியும் வண்ணம்
            உண்டான தொரு'போர்'; அங்கே.
பேரனுக்குச் சார்பானவள்

112. கூரான கருவி இல்லை
            கொடுங்காயம் எதுவும் இல்லை
சீரான தேவ கூட்டம்
            செய்கின்ற சிறிய போர்தான்
ஏரார்ந்த காமன் கோலால்
            இளைஞர்தம் அறிவு தன்னைச்
சீரார்ந்த நுதலார் கூந்தல்
            தன்னொடு நிறுக்க லுற்றான்.

113. பெலிண்டாதான் பேரன் மீது
            பெருங்கோபம் கொண்டு பாய்ந்தாள்
மெலிதாகப் பொடியைக் கொஞ்சம்
            மெல்லியள் தூவி னாளே
வலுவாகக் கொண்டை ஊசி
            வாகாகக் கழுத்தில் பாய்ச்ச
வலியாலே இரைந்தான் பேரன்
            வலுவாக இரைந்தாள் மங்கை.

114. திரும்பவே தருக எந்தன்
            திருமிகு கூந்தல் என்று
திரும்பவும் அவள்பு லம்ப
            திகைத்தனர் அரங்கில் உள்ளோர்
வருந்தவே செய்து பெற்ற
            பொருளெதும் வாரா தென்றும்
திருந்துநல் நிலவில் சென்று
            சேர்ந்திடும் என்றார் சில்லோர்.

115. நிலமதில் இழக்கும் எல்லாம்
            நிலாவினில் சேரும் என்றும்
தலைவனின் அறிவும் அன்னோன்
            தாங்கிய பொடியின் பெட்டி
அலகிலா உடைந்த வாக்கு
            அவற்றொடு உடைந்த நெஞ்சம்
சிலபல இதனை ஒத்த
            சேருமவ் நிலவில் என்றார்
பெலிண்டா வானுலகு செல்லல் 

116. திடுமென ஈரக் காற்றில்
            சென்றது ஒற்றை விண்மீன்
கடிதினில் அதனின் பின்னே
            சென்றதோர் முடியின் கற்றை
முடிவிலா வானம் தன்னில்
            முனைப்புடன் தேடிப் பார்ப்பின்
வடிவழ குடைய விண்மீன்;
            நடுவினில் வனிதை காண்பீர்.

117. கவினுற வளர்த்த கூந்தல்
            கற்றையை இழந்த தாலே
செவிகிழி படவே கூவிச்
            சினத்துடன் சீறிப் பாய்ந்து
புவியுளோர் எள்ளும் வண்ணம்
            'போர்'புரிந் ததனின் பின்னே
குவிந்துவிண் மீனாய் ஆனாள்
            கோமகள் என்றார் போப்பும்.

காப்பிய நோக்கம்

118. அற்பமாம் ஒருத்தி கூட
            அடைந்தனள் வானை என்றால்
பற்பல நலங்கள் கொண்டோர்
            பாருளார் ஏத்த வாழ்வர்
நற்பொருள் இதனை இங்கே
            நம்முளம் புகுத்த வேண்டி
விற்பனக் கவிஞர் போப்பு
            விளம்பி னார்இச் சரிதம் .

119. தன்னுடைக் காலம் தன்னில்
            தன்நாட்டின் கேட்டைக் கண்டு
தன்னுளம் நொந்த போப்பு
            தன்நாட்டைத் திருத்த எண்ணித்
தன்கவித் திறனைக் கொண்டு
            சமைத்தநல் நூலால் நாடு
நன்னிலை அடையும் வாய்ப்பை
            நச்சினார் என்ப தோர்க.

நிறைவு

120. காப்பியச் சுவையுடன் தம்முடைய
            காலத்தில் நிலவிய இழிநிலையைப்
பாப்புனை திறனால் நன்றாகப்
            பாடிய கவிஞர் அலெக்ஸாண்டர்
போப்பவர் இலக்கியம் மொழிபெயர்த்தேன்
            புலமைக் குறைவால் பிழைஇருப்பின்
கூப்பிய கரங்கள் தம்மோடு
            கூறினன் எந்தன் பிழைபொறுப்பீர் .

No comments: